ரூ. 52 மில்லியன் பெறுமதியான காசநோய் மருந்துகள் இலங்கைக்கு இந்தியா வழங்கி வைப்பு!
இலங்கையின் காசநோய் ஒழிப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ரூ. 52 மில்லியன் பெறுமதியான காசநோய் எதிர்ப்பு மருந்துகள் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் காசநோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் திட்டங்கள் தீவிரமாகச் செயற்படுத்தப்பட்டு வரும் பின்னணியில், இலங்கையின் காசநோய் ஒழிப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தினால் விசேட காசநோய் எதிர்ப்பு மருந்துகள் (Anti-TB Medicines) நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
குறித்த மருந்துத் தொகையை, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் இன்று (07) சுகாதார அமைச்சில் வைத்து உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

