புத்தகங்கள் வாசித்தால் சிறைத்தண்டனை குறையும்!
பிரேசில் நாட்டில், சிறைக் கைதிகள் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தங்களது சிறைத்தண்டனைக் காலத்தைக் குறைத்துக்கொள்ளும்
ஒரு மறுவாழ்வுத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இது Remissão pela Leitura (வாசிப்பின் மூலம் தண்டனைக் குறைப்பு) என அழைக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு புத்தகத்தை வாசித்து அதுகுறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்கும் ஒவ்வொரு கைதிக்கும் 4 நாட்கள் சிறைத்தண்டனை குறைக்கப்படுகிறது. ஆண்டுக்கு அதிகபட்சமாக 12 புத்தகங்கள் வரை வாசிக்க அனுமதிக்கப்படுவதால், ஒரு கைதியால் ஆண்டுக்கு 48 நாட்கள் வரை சிறைத்தண்டனையைக் குறைத்துக்கொள்ள முடியும்.
2012ஆம் ஆண்டு பிரேசிலின் குற்றவியல் தண்டனை அமலாக்கச் சட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தில் இலக்கியம், தத்துவம், அறிவியல் மற்றும் புகழ்பெற்ற பாரம்பரிய நூல்கள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள் இடம்பெறுகின்றன.
புத்தகங்களை வாசித்த பிறகு, கைதிகள் அவை தொடர்பான எழுத்துப்பூர்வமான அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கைகள், கைதிகள் புத்தகத்தின் உள்ளடக்கத்தை உண்மையாகப் புரிந்துகொண்டு வாசித்துள்ளார்களா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கடுமையாக மதிப்பீடு செய்யப்படுகின்றன.
சிறைகளில் கைதிகளின் நெரிசலைக் குறைப்பது மட்டுமல்லாமல், வாசிப்புத் திறன், விமர்சனச் சிந்தனை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை மேம்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
கைதிகள் தங்களது நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவிட ஊக்குவிப்பதன் மூலம், அவர்களின் மறுவாழ்வுக்கு வழிவகுப்பதுடன், சிறையிலிருந்து விடுதலையான பின்னர் சமூகத்துடன் வெற்றிகரமாக மீண்டும் இணைவதற்கும் பிரேசில் இந்தத் திட்டத்தின் மூலம் தயார்படுத்தி வருகிறது.

