பாராளுமன்றத்தில் கிரிக்கெட் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலங்கள் சமர்ப்பிப்பு
இலங்கை கிரிக்கெட் சட்டமூலமும், அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலமும் இன்று (06) பாராளுமன்றத்தில் முதலாம் வாசிப்பிற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கிரிக்கெட் சட்டமூலத்தை சமர்ப்பித்தார்.
கிரிக்கெட் விளையாட்டின் நிர்வாகம், ஒழுங்குபடுத்தல், மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான புதிய கட்டமைப்பை உருவாக்குவதுடன், நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நேர்மையை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
அதேவேளை, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை சமர்ப்பித்தார்.
1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி புதிய சட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்தும் வகையில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அடையாளம் காணல், கைது, தடுப்புக்காவல், விசாரணை மற்றும் தண்டனை உள்ளிட்ட நடைமுறைகளை புதிய சட்டமூலம் உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு சட்டமூலங்களும் இன்று பாராளுமன்றத்தில் முதலாம் வாசிப்பிற்காக முன்வைக்கப்பட்டன.

