நீலக்கடலின் மத்தியில் ஒரு முத்து!
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட இலங்கையின் அரிய புகைப்படம்
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) எடுக்கப்பட்ட இலங்கையின் பிரமிக்க வைக்கும் புகைப்படம் ஒன்றை நாசா விண்வெளி வீரர் டாக்டர் அனில் மேனன் பகிர்ந்துள்ளார்.
அவரது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்தப் புகைப்படத்தில், ஆழமான நீல நிற இந்து சமுத்திரத்தால் சூழப்பட்டுள்ள இலங்கைத் தீவு மிகவும் அழகாகக் காட்சியளிக்கிறது.
மேலும், இலங்கையைச் சுற்றியுள்ள சிதறிய மேகக் கூட்டங்களுடன், இந்தியாவின் தென்முனைப் பகுதியும் இந்தப் புகைப்படத்தில் தெளிவாகத் தெரிகிறது.
பூமியிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இப்புகைப்படம், இலங்கையின் சமூக வலைத்தளப் பயனர்களிடையே பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவசரகால மருத்துவ நிபுணரும், அமெரிக்க விண்வெளிப் படை கர்னலுமான அனில் மேனன், கடந்த 2026 ஜூலை மாதம் Soyuz MS-29 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றார்.
எட்டு மாத கால விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், ‘எக்ஸ்பெடிஷன் 74 மற்றும் 75’ திட்டங்களின் விமானப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
உயிரிமருத்துவ ஆராய்ச்சி, விண்வெளி மருத்துவம் மற்றும் விண்வெளி ஆய்வுகூடத்தின் மேம்பாட்டுப் பணிகளிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், அதன் கண்காணிப்புப் பகுதியிலிருந்து பூமியின் பல்வேறு அழகிய நிலப்பரப்புகளைப் புகைப்படம் எடுத்து மேனன் தொடர்ச்சியாகப் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

