குளியாப்பிட்டிய புதிய தபால் அலுவலக கட்டுமானப் பணிகள் ஆரம்பம் – ரூ.29.7 மில்லியன் ஒதுக்கீடு
குளியாப்பிட்டியவில் புதிய தபால் அலுவலகக் கட்டடம் அமைக்கும் பணிகள் 29.7 மில்லியன் ரூபாய் செலவில் நவம்பர் 21ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம், தபால் திணைக்களத்தின் கட்டடங்கள் மற்றும் காணிகள் பிரிவின் வழிகாட்டுதலின் கீழ் 2027 ஜனவரி 21ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழ்வில் உரையாற்றிய ஊடகத்துறை பிரதி அமைச்சர் டாக்டர் கௌஷல்யா அரியரத்ன, குளியாப்பிட்டிய தபால் அலுவலகம் 30 உப தபால் நிலையங்கள் ஊடாக சுமார் 26,000 குடும்பங்களுக்கு சேவையாற்றுவதாக தெரிவித்தார்.
நாடு முழுவதும் தபால் சேவையை மேம்படுத்த அரசாங்கம் 1.2 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும், புதிய கட்டட நிர்மாணம் மற்றும் பழைய கட்டட புனரமைப்புக்காக தலா 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், டிஜிட்டல் மயமாக்கல், மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கூரியர் சேவைகள் உள்ளிட்டவற்றை விரிவுபடுத்தி, தபால் திணைக்களத்தை இலாபகரமான நிறுவனமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

