பணிநீக்கத்திற்குப் பழிவாங்க முன்னாள் நிறுவனத்திற்குத் தீவைத்த இளைஞர்: 19 மில்லியன் யூரோ சேதம்!
வால்-துவாஸ் (Val-d’Oise) மாவட்டத்தின் சான்-உவான்-லோமோன் (Saint-Ouen-l’Aumône) நகரில், தன்னைப் பணிநீக்கம் செய்ததற்குப் பழிவாங்கும் விதமாக முன்னாள் நிறுவனத்திற்குத் தீவைத்த 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நள்ளிரவைத் தாண்டி அதிகாலை 3 மணியளவில், வானூர்தித் துறைக்கான உயர் தொழில்நுட்ப உதிரிபாகங்களைத் தயாரிக்கும் ‘லிசி ஏரோஸ்பேஸ்’ (Lisi Aerospace) நிறுவனத்தின் கட்டிடத்தில் இந்தத் தீவிபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், சுமார் 1,500 சதுர மீட்டர் பரப்பளவிலான வளாகம் சேதமடைந்துள்ளதாகவும், இதன் மதிப்பு 19 மில்லியன் யூரோ எனவும் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் தொழிற்சாலை வளாகத்தில் புகைபிடித்தது மற்றும் சக ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது போன்ற தொழில்முறை விதிமீறல்களுக்காக இவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 18 மாதங்கள் அங்கு பணியாற்றிய இவர், தனது பணிநீக்கம் நியாயமற்றது எனக் கருதியுள்ளார். சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்ட அவர், “என்னை வேலையை விட்டு நீக்கியவர்களைப் பழிவாங்கத் தீ வைக்கிறேன்” என்றும், “நிறுவனம் என்னை அழித்ததைப் போலவே நானும் அதை அழிக்க விரும்பினேன்” என்றும் கூறியதாகக் காவல்துறை மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கண்காணிப்புப் படக்கருவிகளின் (CCTV) முன்னிலையிலேயே இந்தச் செயலில் ஈடுபட்ட அந்த இளைஞர், தன்னுடன் கத்தி மற்றும் சுத்தியலை வைத்திருந்ததுடன், சுத்தியலால் சில உபகரணங்களையும் உடைத்துள்ளார்.
தீவைப்பதற்கு முன்பு உள்ளே பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர்களை அவர் எச்சரித்ததாகவும், எவரது உயிருக்கும் தீங்கு விளைவிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று வாக்குமூலத்தில் கூறியதாகவும் பொந்துவாஸ் (Pontoise) நீதிமன்ற வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
மிகுந்த ஆத்திரத்துடன் காணப்பட்ட அவரை அங்கிருந்த ஊழியர்கள் மடக்கிப் பிடித்து, காவல்துறையினர் வரும் வரை அவருக்குக் காபி கொடுத்து அமைதிப்படுத்தியுள்ளனர்.
ஏற்கனவே காப்பீடு இன்றி வாகனம் ஓட்டிய வழக்கு மட்டுமே இவர் மீது இருந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 22) பிற்பகல் பொந்துவாஸ் விசாரணை நீதிபதி முன்னிலையில் இவர் முன்னிலை படுத்தப்பட்டார். திட்டமிட்ட கொலை முயற்சி, மக்களுக்கு ஆபத்தான முறையில் தீவைத்து அழித்தல் மற்றும் பிறர் சொத்துக்களுக்குக் கடுமையான சேதம் விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் மீது நீதி விசாரணை தொடங்கப்பட்டுள்ளதுடன், இவரைத் தடுப்புக் காவலில் வைக்க அரசுத் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

