கண் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் விசேட சிகிச்சை ஏற்பாடுகள்.

நேற்று இரவு பண்டத்தரிப்பு கோயில் பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் கலந்துகொண்டவர்களில் 157 பேர், கண்களில் கடுமையான வலி, எரிச்சல் மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் சிகிச்சைக்காக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த பகுதியில் நடைபெற்ற திருவிழாவின்போது அதிக ஒளிச்செறிவுடைய லேசர் விளக்குகள் மற்றும் அதிகளவிலான பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட அனைவரும் தாமதமின்றி பரிசோதனை மற்றும் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளத் தேவையான விசேட வசதிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் தொடர்ச்சியாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக ஊழியர்களும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், 60 மேலதிக படுக்கைகளுடன் குறுகியகால தங்குமிடப் பிரிவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

தேவையான மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதுடன், நோயாளிகளுக்கான உணவு மற்றும் குடிநீர் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலான நோயாளிகள் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து இன்று மாலை அல்லது இரவு வீடு திரும்பக்கூடிய நிலையில் இருப்பார்கள் என கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, பொதுமக்கள் இது தொடர்பாக தேவையற்ற அச்சமோ பதற்றமோ கொள்ளத் தேவையில்லை. கண் வலி, எரிச்சல், அதிக கண்ணீர் வடிதல், பார்வையில் மாற்றம் அல்லது கண்களைத் திறப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்படுபவர்கள் தாமதமின்றி வைத்தியசாலைக்கு வந்து பரிசோதனை மற்றும் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நிலைமை தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருவதுடன், மேலதிகமாக வரக்கூடிய நோயாளர்களுக்கும் தேவையான சிகிச்சைகளை வழங்க வைத்தியசாலை முழுமையாகத் தயார்நிலையில் உள்ளது.

Recommended For You

About the Author: admin