பாரிஸ் சார்லஸ்-து -கோல் (Paris-Charles-de-Gaulle) விமான நிலையத்தில் விபத்து

பாரிஸ் சார்லஸ்-து -கோல் (Paris-Charles-de-Gaulle) விமான நிலையத்தில் விபத்து: எயார் சேர்பியா விமானத்துடன் மோதிய ஈஸிஜெட் விமானம்!

பிரான்சின் பாரிஸ் சார்லஸ்-து -கோல் (Paris-Charles-de-Gaulle) விமான நிலையத்தில் தரையில் நின்றுகொண்டிருந்த எயார் சேர்பியா (Air Serbia) நிறுவனத்திற்குச் சொந்தமான எயர்பஸ் (Airbus) விமானமொன்றின் மீது, ஈஸிஜெட் (easyJet) விமானம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 02) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

எயார் சேர்பியா நிறுவனத்தின் ‘எயர்பஸ் A320’ ரக விமானம், விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அடுத்தகட்ட அறிவுறுத்தல்களைப் பெறுவதற்காகத் தரையில் உரிய இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்த வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அப்போது அங்கு வந்த ஈஸிஜெட் விமானத்தின் இறக்கையின் செங்குத்தான நுனிப்பகுதி , நிறுத்தப்பட்டிருந்த எயார் சேர்பியா விமானத்தின் வலதுபுற இறக்கையின் நுனியில் மோதியுள்ளது.

இந்த மோதலில் தமது விமானத்தின் இறக்கைப் பகுதி கணிசமாகச் சேதமடைந்துள்ளதாக எயார் சேர்பியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

 

“இந்தச் சம்பவத்தால் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை; அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்” எனச் சேர்பிய அரச தொலைக்காட்சி (RTS) ஊடாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

விபத்திற்குள்ளான எயர்பஸ் விமானம், சேதங்களை மதிப்பிடுவதற்கான விரிவான தொழில்நுட்பப் பரிசோதனைகளுக்கு (examen technique détaillé) உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான துல்லியமான காரணங்களைக் கண்டறியும் பொருட்டு, பாரிஸ் சார்லஸ்-து -கோல் விமான நிலைய அதிகாரிகளுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக எயார் சேர்பியா தெரிவித்துள்ளது.

180 பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடிய இந்த எயர்பஸ் ஏ320-232 ரக விமானம், 2011 ஆம் ஆண்டு மே மாதம் தயாரிக்கப்பட்டு, 2023 ஏப்ரல் மாதத்திலேயே எயார் சேர்பியா நிறுவனத்தின் சேவையில் இணைக்கப்பட்டிருந்தது.

தொழில்நுட்பப் பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையிலேயே தமது அடுத்தகட்ட விமானப் பயண அட்டவணைகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்துத் தெளிவுபடுத்தப்படும் எனவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin