நாடளாவிய ரீதியில் விசேட சோதனை

இறக்குமதி செய்யப்படும் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் காலணிகள் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் விசேட சோதனைகளும் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

​இதற்கமைய, ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் 108 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பொருட்களைப் பெற்றுக்கொண்ட விதத்தை உறுதிப்படுத்துவதற்கான பற்றுச்சீட்டுகள் அல்லது விலைப்பட்டியல்களை (Invoices) சமர்ப்பிக்கத் தவறிய 84 வணிக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

​இதன்போது சருமத்தை பொலிவாக்கும் கிரீம்கள், முகம் மற்றும் உடல் பூச்சுகள், வாசனைத் திரவியங்கள், கூந்தல் தயாரிப்புகள் மற்றும் விளையாட்டு காலணிகள் உள்ளிட்ட பல்வேறு இறக்குமதி பொருட்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

​சரியான ஆவணங்கள் இல்லாத மற்றும் பொருட்களைப் பெற்றுக்கொண்ட விநியோகஸ்தர்களை அடையாளம் காண முடியாத சந்தர்ப்பங்களில், சுமார் 1.5 மில்லியன் ரூபாய் சந்தைப் பெறுமதியுடைய பொருட்கள் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

 

​குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பொருட்களின் விநியோக வழித்தடம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் காண்பதற்கான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

​இதேவேளை, 2026 ஆம் ஆண்டில் இதுவரை கிரீம்கள் மற்றும் திரவ வகை அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் மாத்திரம் சுமார் 785 சோதனைகள் நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

 

​அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள 83 ஆம் இலக்க கட்டளைக்கு அமைய, பொருட்களைப் பெற்றுக்கொண்ட விதத்தை உறுதிப்படுத்தக்கூடிய முறையான ஆவணங்களை தம்வசம் வைத்திருப்பது உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், களஞ்சியப்படுத்துபவர்கள் மற்றும் வர்த்தகர்களின் பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin