லங்கா பிரீமியர் லீக் (LPL) – தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் தமீம் ரஹ்மான் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பங்களாதேஷை பூர்வீகமாக கொண்ட பிரித்தானிய பிரஜையான அவர், எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்பதுடன் லங்கா பிரீமியர் லீக் அல்லது வேறு ஏதேனும் போட்டியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டா என்பதும் குறிப்பிடப்படவில்லை.
கொழும்பில் நேற்று நடைபெற்ற LPL 2024 இன் வீரர்கள் ஏலத்தில் தம்புள்ளை தண்டர்ஸ் பங்குபற்றியதன் பின்னணியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
LPL 2024 ஏலத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் எதிர்ப்பு குழுவினரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.