பிறந்தநாள் பரிசாக ‘தங்கலான்’ பட காட்சிகள்: அனல் பறக்கும் வீடியோ

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் தங்கலான். இத் திரைப்படம் அறிவிக்கப்பட்டவுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில் இன்று நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு, தங்கலான் திரைப்படத்தின் ஒரு காட்சியை வீடியோவாக வெளியிட்டு அவருக்கு சமர்ப்பித்துள்ளனர் படக்குழுவினர்.

இந்த வீடியோவில், பொன்னியின் செல்வனின் கரிகாலன், எப்படி மக்களுக்கு தலைவனாக மாறுகிறார் என்பதை நம்மால் காணக்கூடியதாக இருக்கிறது.

இந்தத் திரைப்படத்துக்காக குதிரைச் சவாரி செய்வது, கொளுத்தும் வெயிலில் சண்டைக் காட்சிகள், உடல் முழுவதும் மண் என இவரது அர்ப்பணிப்பு கண்கூடு.

இத் திரைப்படத்தில் விக்ரமுடன் பார்வதி திருவோத்து முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதோடு மாளவிகா மோகனனும் இணைந்துள்ளார்.

தங்கலான் திரைப்படம் 1900 ஆம் ஆண்டுக்கு முன்பு இடம்பெற்ற கோலார் கோல்ட் ஃபீல்ட் (Kolar gold field)இன் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளதோடு தென்னிந்தியாவில் தங்க ஆராய்ச்சியில் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பங்கு அழிக்கப்பட்டமையை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் இப் படத்தின் இசை வெளிவரவுள்ளது.

இந்தத் திரைப்படமானது ஜனவரி 26ஆம் திகதி வெளிவர இருந்த நிலையில், திகதி பிற்போடப்பட்டது. அத்துடன் இந்தத் திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

சியான் விக்ரமின் அபரிமிதமான நடிப்பும், பரபரப்பான கதாபாத்திரங்களும் அவரது இரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.

Recommended For You

About the Author: admin