பிரான்ஸில் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு எச்சரிக்கை !!
போலி முகவர்களிடம் மீண்டும் ஏமாறாதீர்கள்
இணைய மற்றும் நிதி மோசடிகளில் பணத்தை இழந்தவர்களைக் குறிவைத்து, “இழந்த பணத்தை மீட்டுத் தருகிறோம்”
எனக் கூறி மீண்டும் பணம் பறிக்கும் போலி ‘மீட்பு முகவர் கும்பல்கள் குறித்து பிரான்ஸின் முன்னணி நுகர்வோர் அமைப்பான கியூ சொய்சிர் என்செம்பிள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வழக்கறிஞர்கள், புலனாய்வாளர்கள் அல்லது தொழில்நுட்ப நிபுணர்கள் போல நடித்துத் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஊடாகத் தொடர்பு கொள்ளும் இக்கும்பல்களால்,
மோசடியால் பாதிக்கப்பட்ட 66 சதவீதமானோர் இவ்வாறு அணுகப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நிதிச் சந்தை அதிகாரசபையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்காக, பிரான்ஸ் நிதிச் சந்தை அதிகாரசபையின் உண்மையான தொலைபேசி இலக்கத்தைத் திரையில் காட்டும் ‘ஸ்பூஃபிங்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் மோசடியாளர்கள் அழைப்புகளை ஏற்படுத்துகின்றனர்.
மேலும், கிரிப்டோகரன்சி மோசடியில் பணத்தை இழந்தவர்களைத் தொடர்பு கொள்ளும் போலிப் பொறியியலாளர்கள் பிளாக்செயின் மூலம் பணத்தை மீட்பதாகக் கூறுவதுடன், ஐரோப்பிய நுகர்வோர் மைய வலையமைப்பின் பிரதிநிதிகள் போலவும் நடித்து ஏமாற்றுகின்றனர்.
இழந்த பணம் வங்கியில் பாதுகாப்பாக உள்ளதாகவும், அதனைப் பெறுவதற்குத் தனிப்பட்ட விபரங்களை உடனடியாக வழங்குமாறும் வற்புறுத்தும் இக்கும்பல்கள், குறிப்பிட்ட திகதிக்குள் பணத்தைப் பெறாவிட்டால் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கிவிடுவோம் எனப் போலி காலக்கெடு விதித்து அழுத்தம் கொடுக்கின்றனர்.
இழந்த பணத்தை மீட்டுத் தருவதாகக் கூறித் தாம் ஒருபோதும் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ள மாட்டோம் எனத் தெரிவித்துள்ள பிரான்ஸ் நிதிச் சந்தை அதிகாரசபை நீதிமன்ற அதிகார அமைப்புகளுக்கு மட்டுமே இதில் தலையிடும் அதிகாரம் உள்ளதாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
இத்தகைய சந்தேகத்திற்கிடமான அழைப்புகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் எனவும், உடனடியாகத் தமது ‘AMF Epargne Info Service’ பிரிவில் முறைப்பாடு செய்யுமாறும் அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க, எவ்வித மீட்புச் சேவை இணையதளங்களின் சட்டப்பூர்வ அறிவிப்புகளைச் சரிபார்ப்பதுடன், அதிகாரப்பூர்வ வர்த்தக மற்றும் நிறுவனங்கள் பதிவேடு மற்றும் பொதுத் தொலைபேசி அடைவுகள் ஊடாக அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

