𝐌𝐫𝐬.𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐞 2026 சர்வதேச போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து இலங்கை பெண்

𝐌𝐫𝐬.𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐞 2026 சர்வதேச போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து இலங்கை பெண்

கொழும்பில் நடைபெற்ற 49ஆவது ‘மிசஸ் யுனிவர்ஸ் 2026 சர்வதேச அழகிப் போட்டியில், இலங்கைப் பிரதிநிதி தஸ்மிலா பீரிஸ் 7ஆவது ரன்னர்-அப் இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

உலக அளவில் திருமணமான பெண்களின் தன்னம்பிக்கை, தலை தலைமைத்துவம் மற்றும் சமூகப் பங்களிப்பைக் கொண்டாடும் நோக்கில் நடத்தப்படும் இப்போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த முதல் இலங்கைப் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

கடந்த அக்டோபர் 18 முதல் 25 வரை இலங்கையில் நடைபெற்ற இந்த சர்வதேசப் போட்டியில் உலகெங்கிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக அக்டோபர் 5ஆம் தேதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற தேசியப் போட்டியில் ‘மிசஸ் யுனிவர்ஸ் இலங்கை 2026′ பட்டத்தை வென்றதன் மூலம், தஸ்மிலா பீரிஸ் சர்வதேச அரங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றார்.

அக்டோபர் 24ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் மொனாக்கோ நாட்டின் பிரதிநிதி இசிடோரா ரான்கோவிக் மிசஸ் யுனிவர்ஸ் 2026’ கிரீடத்தைச் சூடினார்.

இப்போட்டியில் ஆசியாவின் பிரியா முஞ்சால் முதல் ரன்னர்-அப் இடத்தையும், ஜெர்மனியின் கிறிஸ்டின் லானெட்டா மற்றும் இந்தியாவின் செஹார் ஓம் பிரகாஷ் ஆகிய இருவர் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தனர்.

போட்டியை நடத்தும் நாடான இலங்கை, உலக நாடுகளிலிருந்து வருகை தந்த போட்டியாளர்களுக்குத் தனது விருந்தோம்பல், சிறந்த கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அம்சங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது.

தேசிய ஆடை அணிவகுப்பு மற்றும் கலாச்சார நிகழ்வுகள் மூலம் சர்வதேச அளவிலான கலாச்சாரப் பரிமாற்றத்திற்கான ஒரு தளமாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.

தஸ்மிலா பீரிஸின் இந்த உலகளாவிய வெற்றி சர்வதேச அரங்கில் இலங்கை பெண்களின் ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.

பெண்களின் வெளித் தோற்றத்தையும் தாண்டி அவர்களின் சாதனைகள், லட்சியங்கள் மற்றும் சமூகப் பங்களிப்பை கௌரவிக்கும் தளங்களின் முக்கியத்துவத்தை இவரது வெற்றி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin