கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியமை மன்னிக்க முடியாத வரலாற்று தவறு என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களவைத் தேர்தல் விரைவில் இடம்பெறவுள்ள நிலையில், தமிழகம் – நெல்லையில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி எவ்வளவு தேச விரோதச் செயல்களை செய்துள்ளது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்கும் இதன் உண்மைத்தன்மை தெரியும்.
இவ்விரு கட்சியினரும் தமிழ் நாட்டின் உயிர் நாடியான கச்சத்தீவை துண்டித்து வேறு ஒரு நாட்டிற்கு கொடுத்துள்ளனர். திரைமறைவில் செய்த இந்த வரலாற்றுப் பிழையை ஒருபோதும் மன்னிக்கவே முடியாது.
இந்த வரலாற்றுப் பிழையை மன்னிக்கவே முடியாத பாவமாகவும் நான் கருதுகின்றேன். இது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி செய்த தேசத்துரோக செயலாகும்.
அவர்கள் செய்த பாவத்திற்காக தமிழக மீனவர்களே தண்டிக்கப்படுகின்றனர்.
பல தலைமுறையாக பயன்படுத்தி வந்த இடத்தை தாரை வார்த்ததை பாஜக ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம் என்று கூறி மோடி அரசு அதனை தேர்தல் பிரசாரமாக பயன்படுத்தியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தியாவில் பொதுத் தேர்தலை குறிவைத்து மோடி அரசு இதுபோன்ற அறிக்கையை வெளியிட்டாலும், கச்சத்தீவு இந்தியாவுக்கு வழங்கப்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.