போதுமான விமானங்கள் இல்லாததாலும், பல விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறுகளாலும் கடந்த ஆண்டு 800க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
இந்த விமான ரத்து மற்றும் தாமதங்கள் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் பல சந்தர்ப்பங்களில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு ஆறு A-350 ரக பயணிகள் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஒரே நேரத்தில் முந்நூறுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய விமானங்களை கொள்வனவு செய்வது இரத்துச் செய்யப்பட்ட போதும் மாற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், விமான நிறுவனத்திடம் இருந்த இருபத்தி நான்கு விமானங்களில் ஆறு, சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், பறக்கக்கூடிய விமானங்களின் எண்ணிக்கையை பதினெட்டாகக் குறைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான மேசா விமானங்கள் ரத்து செய்யப்பட்டமை மற்றும் தாமதம் குறித்து விமான நிறுவனத்தின் தகவல் தொடர்பு மேலாளரிடம் கேட்டபோது, விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அத்துடன், கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு உலகில் விமான உதிரி பாகங்களின் பற்றாக்குறை மற்றும் வேறு பல காரணிகள் பாகங்களை வாங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த டிசெம்பர் மாதம் முதல் இரண்டு குத்தகை முறைகளின் கீழ் மூன்று பயணிகள் விமானங்களை கொள்வனவு செய்ததன் மூலம் தாமதங்கள் மற்றும் ரத்துச்செய்தல்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.