சில நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தொழிநுட்பச் சிக்கல்கள் காரணமாக அரச நிறுவனங்களில் வரி இலக்கம் (TIN) திறக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
”அடுத்த மாதம் முதல் நடப்பு கணக்கு தொடங்கும் போதும், வாகனங்களை பதிவு செய்யும்போதும், புதுப்பிக்கும்போதும் வரி இலக்கம் கட்டாயமாக்கப்படும் என்ற தீர்மானம் ஏப்ரல் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வசதிகள் போதிய அளவு இல்லாததால் இதற்கான கால அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 12 இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறும்18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே வரி செலுத்தத் தகுதியுடையவர்கள். இதனால், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வரி இலக்கத்தை பெற வேண்டும். ஆனால் அவை அனைத்தும் வரிப் பொறுப்புக்கு உட்பட்டவை என்று அர்த்தமல்ல.
ஏப்ரல் மாதம் முதல் நடப்புக் கணக்கு தொடங்கும் போதும், கட்டிடத் திட்டங்களுக்கு அனுமதி கோரும் போதும், வாகனப் பதிவு, உரிமம் புதுப்பித்தல், நில உரிமைப் பதிவு போன்றவற்றிலும் வரி இலக்கம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.” என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.