பெருந்தோட்ட முறைமை தோல்வி கண்டுவிட்டது: வேலுகுமார்

பெருந்தோட்டங்களை தனியார் மற்றும் அரச கம்பனிகளின் கீழ் நிர்வகிக்கும் முறைமை 1972ஆம் ஆண்டு முதல் தோல்விகண்ட ஒரு முறையாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

பெருந்தோட்ட தேயிலை உற்பத்தி முறைக்கு பதிலாக சிறுதோட்ட தேயிலை முறைமையொன்றை அறிமுகப்படுத்த வேண்டுமென்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை இன்று பாராளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

”1866ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேயிலை பயிர்ச் செய்கையால் எமது நாடு பாரிய பொருளாதார நன்மைகளை அடைந்தது. 1950ஆம் ஆண்டுவரை நாட்டின் அந்நிய வருமானத்தில் 90 சதவீத பங்களிப்பை பெருந்தோட்டத்துறை வழங்கியது. அதேபோன்று நாட்டின் தேசிய வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு இத்துறையிலேயே கிடைக்கப்பெற்றது.

ஆனால், 1972ஆம் ஆண்டு பெருந்தோட்டத்துறை அரசுடமையாக்கப்பட்ட பின்னர் இத்துறை பாரிய வீழ்ச்சியில் சென்றது. 1972ஆம் ஆண்டு 22 கம்பனிகளின் கீழ் தனியார் மயப்படுத்தப்பட்டது முதல் இன்றுவரை இத்துறை நட்டத்திலேயே இயங்குகிறது.

கடந்த 30 வருடங்களாக நட்டத்தில் இயங்கும் இத்துறையை அபிவிருத்தி செய்ய நவீன முறையொன்று அவசியமாகும். தெற்கில் தேயிலை சிறுதோட்ட உரிமையாளர்கள் உருவானதால் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.

ஒருகாலத்தில் பெருந்தோட்டத்துறையில் இருந்துதான் 90 சதவீத தேயிலை உற்பத்தி இடம்பெற்றது. இரண்டு இலட்சத்தி 60ஆயிரம் ஹெக்டேயர் வரை அப்போது பெருந்தோட்டத்துறையில் இருந்தது. ஆனால், இன்று 40 சதவீதமான நிலப்பரபை கொண்டுள்ள சிறுதோட்டங்களில்தான் 70 சதவீதமான தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது.

60 சதவீத நிலப்பரபை கொண்டுள்ள பெருந்தோட்டங்களில் 30 சதவீத தேயிலைதான் உற்பத்தி செய்யப்படுகிறது. அரசாங்கம் இந்த விடயத்தில் உரிய தீர்மானங்கள் எடுத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உடமையாளர்களாக்கப்பட வேண்டும். அதன்மூலமே இத்துறையை பாதுகாக்க முடியும் என்பதுடன், நாட்டுக்கு வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.” என்றார்.

Recommended For You

About the Author: admin