10 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்த பிரிட்டிஷ் எயார்வேஸ்!
பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான சேவை மீண்டும் இலங்கைக்குத் திரும்பியுள்ளது. லண்டன் கேட்விக் விமான நிலையத்திலிருந்து BA2045 என்ற விமான இலக்கத்துடன் பயணித்த போயிங் 777-200ER ரக விமானம், இன்று (ஒக்டோபர் 24) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
லண்டன் கேட்விக் மற்றும் கொழும்பு இடையே வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து இணைப்பு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் முக்கிய சுற்றுலாச் சந்தைகளில் ஒன்றான பிரித்தானியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், வர்த்தகப் பயணங்களை இலகுபடுத்தவும் இந்தச் சேவை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் பிரிட்டிஷ் எயார்வேஸின் பொது விற்பனை முகவராக ஹேலீஸ் குழுமத்தின் துணை நிறுவனமான அட்வான்டிஸ் ஏவியேஷன் சர்வீசஸ் செயற்படவுள்ளது.
குளிர்கால விமான அட்டவணையின் ஒரு பகுதியாகப் பருவகால சேவையாக முன்னெடுக்கப்படும் இந்த விமானப் பயணங்களில், எகனமி, பிரீமியம் எகனமி மற்றும் பிசினஸ் கிளாஸ் வசதிகள் பயணிகளுக்கு வழங்கப்படவுள்ளன.

