மாலைதீவுக்கு 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மருந்துகளை நன்கொடையாக வழங்கியது இலங்கை!
மாலைதீவு அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை இலங்கை அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது. கொழும்பிலுள்ள சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் ஒக்டோபர் 22ஆம் திகதி இந்த மருந்துகள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத்திடம் மருந்துகளைக் கையளித்தார். மாலைதீவின் சுகாதார அமைச்சர் கீலா அலியின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த உதவி வழங்கப்பட்டது. மருத்துவ விநியோகப் பிரிவு, அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் பங்களிப்புடன் மருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நன்கொடைக்கு மாலைதீவு உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் பாராட்டினார்.

