இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஐசிசி விதித்துள்ள தடைக்கு மத்தியில் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் (Geoff Allardice) இலங்கை வந்துள்ளார்.
இலங்கை வந்துள்ள அவர் இன்றைய தினம் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை சந்தித்துள்ளார்.
இதன்போது, ஐசிசி தடையை நீக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐசிசியின் பிரதம நிறைவேற்று அதிகாரியுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், இலங்கை கிரிக்கெட்டின் முன்னோக்கி செல்லும் வழி குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
ஐசிசியின் பிரதம நிறைவேற்று அதிகாரி இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பார் என்றும் விளையாட்டு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.