தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் – புதிய இலக்கை எட்டியது இலங்கை!
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 20 இலட்சத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டுக்கான 20 இலட்சமாவது சுற்றுலாப் பயணி இன்று (20) நாட்டை வந்தடைந்துள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த குறித்த சுற்றுலாப் பயணி தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவரது குடும்பத்தில் தாயான நத்தாலியா, தந்தையான செர்கெய் மற்றும் மகளான அன்னா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், 2024ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இலங்கை மீண்டும் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் என்ற இலக்கை எட்டியிருந்தது. தொடர்ந்து 2025ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் திகதியும் இந்த இலக்கை அடைந்திருந்தது.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க, உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இலங்கையின் சுற்றுலாத்துறை தொடர்ச்சியாக மீட்சியையும் வளர்ச்சியையும் பதிவு செய்து வருவதை இந்த இலக்கை எட்டியமை எடுத்துக்காட்டுவதாகக் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல், சர்வதேச வானூர்திப் பயணப் பாதைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், அதிகரித்துள்ள வானூர்தி எரிபொருள் விலைகள் மற்றும் உலகப் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் ஆகியவற்றுக்கு மத்தியிலும் இந்த இலக்கை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட டித்வா அனர்த்தத்தைத் தொடர்ந்து சுற்றுலாத்துறை எதிர்கொண்ட சவால்களையும் அவர் சுட்டிக்காட்டினார். எனினும், இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் துறையின் வளர்ச்சி வேகம் தொடர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
சுற்றுலாத்துறை அமைச்சின் தரவுகளின்படி, இந்த ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாளாந்த சராசரி சுற்றுலாப் பயணிகள் வருகை 7,480 ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 7,130 ஆகக் காணப்பட்டதுடன், இது சுமார் 4.9 சதவீத அதிகரிப்பாகும்.
புதிய சர்வதேச வானூர்தி சேவைகளின் அறிமுகம், நேரடி வானூர்திப் பயண இணைப்புகளின் விரிவாக்கம், புதிய சுற்றுலாச் சந்தைகளில் நுழைதல் மற்றும் சர்வதேச சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகியவை இந்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், சுற்றுலாத்துறை மூலம் நாட்டுக்குக் கிடைக்கும் பொருளாதார நன்மைகளையும் உயர்த்துவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, மாற்றமடையும் நாணய மாற்று விகிதங்கள், பொருளாதார நிலைமைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் செலவிடும் முறைகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக சுற்றுலா வருமானத்தை மதிப்பிடும் முறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் 2025ஆம் ஆண்டில் பதிவான மொத்த சுற்றுலாப் பயணிகள் வருகை எண்ணிக்கையை விட அதிகமான எண்ணிக்கையை எட்டுவதே அரசாங்கத்தின் அடுத்த இலக்காகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்காக வானூர்திப் பயண இணைப்புகளை விரிவுபடுத்துதல், சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், புதிய சந்தைகளை உருவாக்குதல் மற்றும் சுற்றுலாச் சேவைகளை மேம்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் தனியார் துறை, வானூர்தி சேவை நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

