நில்திய பொக்குன பகுதியைப் பார்வையிட தற்காலிகத் தடை! – வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் அறிவிப்பு
இராவணா எல்ல சரணாலயத்தில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத் தலமான நில்திய பொக்குன பகுதியைப் பார்வையிடுவதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் உத்தியோகபூர்வமான மற்றும் முறையான அனுமதி நடைமுறை ஆரம்பிக்கப்படும் வரை, குறித்த பகுதிக்குள் சுற்றுலாப் பயணிகள் நுழைவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.
திணைக்களத்தின் உரிய அனுமதியின்றி சிலர் சுற்றுலாப் பயணிகளை நில்திய பொக்குன பகுதிக்கு அழைத்துச் செல்வதாகக் கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் மற்றும் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டியின் பங்களிப்பு இன்றி எவரும் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக அப்பகுதிக்குள் அனுமதிக்கப்படக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நில்திய பொக்குன பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளை முறையான அரச ஒழுங்குமுறையின் கீழ் முன்னெடுப்பதற்கான புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலும் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது

