ஆசிரியர் ஆட்சேர்ப்புடன் தொடர்புடைய நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், தங்களுக்கான பாடசாலை விருப்பங்களை இணையவழியில் தெரிவிப்பதற்கான முறைமை இன்று (17) முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலின்படி, பாடசாலை விருப்பங்களைப் பதிவு செய்வதற்கான நிகழ்நிலை முறைமை தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளதுடன், கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ள Teacher Recruitment Application System ஊடாக விண்ணப்பதாரர்கள் தமது விருப்பங்களைத் தெரிவிக்க முடியும்.
இதற்காக, தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அழைப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருமுறை கடவுச்சொல் (OTP) மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது பரீட்சை இலக்கம் ஆகியவற்றைப் பயன்படுத்தி முறைமைக்குள் பிரவேசிக்க வேண்டும்.
இதுவரை தபால் மூலம் அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள், கடிதம் கிடைக்கும் வரை இணையவழி முறைமைக்குள் பிரவேசிக்க முடியாது என அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், அழைப்புக் கடிதம் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் விண்ணப்பதாரர்கள் கவலைப்படத் தேவையில்லை எனவும், கடிதம் கிடைக்காதவர்களுக்கு நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ள திகதி வரை முறைமைக்குள் பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேர்முகப் பரீட்சை தினத்தன்றும் அழைப்புக் கடிதம் கிடைக்காத விண்ணப்பதாரர்கள் பாடசாலை விருப்பங்களைத் தெரிவிப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது

