இந்தியாவுக்கான சுற்றுலாவை ஊக்குவிக்க 11 நாடுகளுக்கு இலவச இ-விசா திட்டம் அறிவிப்பு!
தென்கிழக்காசியாவின் 11 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச மின்னணு சுற்றுலா விசா (Free E-Tourist Visa) வழங்குவதற்கு இந்தியா முன்மொழிந்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிலிப்பைன்ஸின் மணிலாவில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற 23ஆவது இந்தியா – ஆசியான் (ASEAN) உச்சி மாநாட்டில் இந்த முன்மொழிவை அறிவித்துள்ளார்.
இதன் மூலம் புருணை, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, திமோர்-லெஸ்தே மற்றும் வியட்நாம் ஆகிய 11 நாடுகளின் பிரஜைகள் பயனடையவுள்ளனர்.
இந்தியாவுக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா, பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், நீண்டகால கடல்சார் ஒத்துழைப்புத் திட்டம், இணையப் பாதுகாப்பு தடயவியல் பயிற்சி, முக்கிய கனிம வளங்கள் தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் சிவில் அணுசக்தித் துறையில் தொழில்நுட்பப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு முன்மொழிவுகளையும் இந்தியப் பிரதமர் முன்வைத்துள்ளார்.
அத்துடன், அனர்த்த முகாமைத்துவத் துறையிலும் இந்தியாவும் ஆசியான் நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளன.
எனினும், இலவச மின்னணு சுற்றுலா விசா திட்டத்தை நடைமுறைப்படுத்தும் திகதி மற்றும் அதற்கான விரிவான தகைமை நிபந்தனைகள் தொடர்பில் இந்திய அரசாங்கம் இதுவரை அறிவிக்கவில்லை.

