இந்தியாவில் 57 மெகாவாட் மின்நிலையம் நிர்மாணிக்க இலங்கை நிறுவனத்திற்கு 25 பில்லியன் ரூபா ஒப்பந்தம்
இலங்கையின் வலுசக்தித் துறை நிறுவனமான லக்தனவி லிமிடெட், இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 57 மெகாவாட் இயற்கை எரிவாயு மின்நிலையமொன்றை நிர்மாணிப்பதற்காக சுமார் 25 பில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டுள்ளது.
அந்தமான் தீவின் போர்ட் பிளேயரில் உள்ள ஹோப் டவுன் பகுதியில் இந்த மின்நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் அப்பகுதியின் மின்சார உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அரசுக்குச் சொந்தமான என்.டி.பி.சி நிறுவனத்தின் சர்வதேசப் போட்டி ஒப்பந்த நடைமுறையின் ஊடாக லக்தனவி நிறுவனம் இத்திட்டத்தைப் பெற்றுள்ளது.
2026 செப்டெம்பர் 21ஆம் திகதி புதுடெல்லியில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. மின் உற்பத்தி உபகரணங்களை பின்லாந்தைச் சேர்ந்த வார்ட்சிலா நிறுவனம் வழங்கவுள்ளது.
இந்தியாவின் போட்டிமிக்க சந்தையில் இலங்கை நிறுவனமொன்று இத்தகைய பாரிய உட்கட்டமைப்பு ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளமைக்குத் தனது மகிழ்ச்சியையும் பாராட்டையும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் இலங்கையின் பொறியியல் நிபுணத்துவத்திற்கும் சர்வதேச மின்சக்தித் துறையில் அதன் வளர்ந்து வரும் பங்களிப்பிற்கும் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

