79 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கிராமத்தில் ஒளிர்ந்த மின்சாரம்!
மேற்கு வங்க மாநிலத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சக்தஹ் (Chakdah) கிராம மக்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி மறக்க முடியாத மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆதிவாசி கிராமத்திற்கு முதன்முறையாக மின்சார இணைப்பு கிடைத்துள்ளது.
சுமார் 400 ஆதிவாசி குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பே மின்கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்காமல் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
தற்போது மின்சார இணைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே 50 வீடுகளில் மின் அளவீட்டுப் பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, மின்சாரம் இல்லாததால் குழந்தைகளின் இரவு நேரப் படிப்பு உள்ளிட்ட அன்றாட வாழ்க்கையில் பல சிரமங்களைச் சந்தித்த குடும்பங்களுக்கு இது மிகப்பெரிய மாற்றமாக அமையும்.
பல ஆண்டுகளாகக் காத்திருந்த மக்களுக்கு, இந்தத் தீபாவளியில் கிடைத்திருக்கும் உண்மையான பரிசு பட்டாசுகளோ, புத்தாடைகளோ அல்ல… அவர்களின் வீடுகளில் ஒளிரத் தொடங்கிய மின்சார வெளிச்சம்தான்!

