இலங்கை – கத்தார் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த ஜனவரி முதல் கூட்டு ஆணைக்குழு மீண்டும் ஆரம்பம்!
இலங்கை மற்றும் கத்தார் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கை – கத்தார் கூட்டு ஆணைக்குழுவின் (Joint Commission) செயற்பாடுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க இரு தரப்பும் உடன்பாடு கண்டுள்ளன.
ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி மாநாட்டினால் (UNCTAD) கத்தார் தலைநகர் தோஹா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 9வது உலக முதலீட்டு மாநாட்டிற்கு இடையே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி மாநாட்டில் கலந்துகொண்ட வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவிற்கும், கத்தார் நாட்டின் வெளிநாட்டு வர்த்தக விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் கலாநிதி அஹ்மத் பின் மொஹமட் அல்-சயீத் (H.E. Dr. Ahmad bin Mohammed Al-Sayed) அவர்களுக்கும் இடையே இந்த உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கடந்த 2017ஆம் ஆண்டிற்குப் பின்னர் இக்கூட்டு ஆணைக்குழுவின் கூட்டங்கள் நடத்தப்படாத நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை ஊக்குவிக்கும் அத்தியாவசிய நடவடிக்கையாக இதனை விரைவாக மீண்டும் ஆரம்பிக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் போது இலங்கையில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கட்டார் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்திய அமைச்சர் வசந்த சமரசிங்க, குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட எரிசக்தித் துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டினார். அத்துடன், இலங்கையில் பாதுகாப்பான முதலீடுகளுக்குத் தேவையான அனைத்துச் சூழலும் வசதிகளும் தற்போது தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.
மேலும், “இலங்கை எக்ஸ்போ 2027” (Sri Lanka Expo 2027) கண்காட்சியில் பங்கேற்குமாறு கட்டார் தூதுக்குழுவிற்கு அமைச்சர் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்தார்.
இந்தச் சந்திப்பில் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க மற்றும் வர்த்தக அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

