30 கிலோ இட்லியில் செஃப் தாமுவின் முகம்: – கண்ணீருடன் விடை கொடுத்த இட்லி இனியவன்!
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவின் மறைவையொட்டி, சமையல் கலைஞர் ‘இட்லி இனியவன்’ 30 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட இட்லியில் அவரது உருவத்தைப் பதித்து மலர் வளையம் வைத்து வினோதமான முறையில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து சமையல் கலைஞர் இட்லி இனியவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பல வகையான உணவுகளை சமைத்து, சமையல் துறையை நோக்கிப் பல இளைஞர்களை உருவாக்கிய மிகப்பெரிய சமையல் வல்லுநர் செஃப் தாமு ஆவார்.
அண்மையில் 450 கிலோ எடையில் ஒரே இட்லியை உருவாக்குவதற்கு அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார்.
எப்போதும் சமையல் துறை சார்ந்த சிந்தனையிலேயே இருக்கும் அவர், மிகவும் விரும்பி சாப்பிடும் உணவான இட்லியிலேயே, 30 கிலோ இட்லியில் அவரது உருவத்தைப் பதித்து, அதில் மலர் வளையம் வைத்து எங்கள் அஞ்சலியைச் செலுத்தியுள்ளோம்” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
சமையல் துறைக்கு செஃப் தாமு ஆற்றிய சிறந்த பங்களிப்பையும், இளைஞர்களுக்கு அவர் அளித்த ஊக்கத்தையும் நினைவுகூர்ந்து இட்லி இனியவன் தனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்துள்ளார்.

