யாழ்ப்பாண மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு விழா இன்றைய தினம்(17.07.2026) காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் சிறப்புற நடைபெற்றது.
இவ் ஆடிப்பிறப்பு விழாவில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தார்கள்.
இந் நிகழ்வில் வரவேற்புரையை ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் திருமதி தயாபரி கிரிதரன் அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களால் குழுப்பாடல், பல்லியம் இசை நிகழ்வுகளுடன் ஆடிப்பிறப்பின் மகிமை தொடர்பாக மாவட்டச் செயலக உத்தியோகத்தர் திருமதி க. குணதர்சனா அவர்களின் உரை உள்ளிட்ட கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.
இந் நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், இன்றைய நிகழ்விற்கு வருகை தந்த கெளரவ அமைச்சர் அவர்களை வரவேற்றதுடன், மாவட்டச் செயலகத்தில் வருடாந்தம் ஆடிக் கூழ் குடித்தலுடன் மாத்திரமே ஆடிப்பிறப்பு கொண்டாட்டமானது முன்னெடுக்கப்படும்.
ஆனால் இம் முறை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளுடன் கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும், இவ் கலை நிகழ்வினை ஆற்றிய உத்தியோகத்தர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
மேலும், இவ்வாறான நிகழ்வுகளில் தமது திறமைகளை வெளிக் கொணராமல் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் தமது திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியதுடன், ஆடிப்பிறப்பின் மகிமை பற்றிய சிறப்புரை வழங்கிய உத்தியோகத்தருக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள தமிழ் மொழி தின மற்றும் விபுலானந்தர் நினைவு தின வைபவத்தில் தமிழ் தாய் வாழ்த்து ஒன்றை நிகழ்த்துவதற்கான வாய்ப்பும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அலுவலகத்திற்கு வந்து கோவைகளுடன் மாத்திரமே தமது பணிகளை மேற்கொண்டு பின்னர் வீடு திரும்பும் செயற்பாடுகளுக்கு அப்பால் தமது துறை சார்ந்த ஏனைய திறமைகளையும் வெளிக்கொணர வேண்டும் என்பதற்கான களமாக இவ் நிகழ்வு அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த வாரம் அதிமேதகு ஜனாதிபதியுடனான மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கான கலந்துரையாடல் நடைபெற்ற போது அதில் மாவட்ட ரீதியான காட்சிப்படுத்தலில் எமது மாவட்டத்தின் காட்சிப்படுத்தல் முதல் நிலையில் திகழ்ந்தமை பெருமைக்குரிய விடயமாகும்.
இதற்கு உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவருடைய பங்களிப்புமே காரணம் என தெரிவித்த அரசாங்க அதிபர் இவ்வாறான மாவட்ட செயற்பாடுகளுக்கு மென்மேலும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.
இவ் ஆடிப்பிறப்பு விழாவில் மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) பா.ஜெகரன், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் திரு.எஸ். கபிலன் உள்ளிட்ட மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
ஊடகப் பிரிவு,
மாவட்டச் செயலகம்,
யாழ்ப்பாணம்.



