யாழ். பிரதேச சபை ஒன்றில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழல்!
யாழில், அரச பணியாளர்கள் இருவரை வைத்து, அவர்களுக்கு மேலுள்ள உத்தியோகத்தர் ஒருவர் தனது சொந்த வீட்டு வேலையை செய்வித்த சம்பவமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச சபை ஒன்றில் முகாமைத்துவ உத்தியோகத்தராக கடமை புரியும் நரிசிங்கம் (பெயர் மாற்றம்) என்ற உத்தியோகத்தர் ஒருவர், பிரதேச சபையில் தனக்கு கீழ் பணி புரியும் நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளரையே இவ்வாறு முறைகேடாகப் பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த நரிசிங்கம் என்ற உத்தியோகத்தர் கடந்த வியாழக்கிழமை (04.06.2026) தனக்கு கீழ் பணிபுரியும் இரண்டு ஊழியர்களையும் கடமை நேரத்தில், கச்சேரிக்கு அண்மித்த பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வர்ணம் பூசுவதற்கு அனுப்பியுள்ளார்.
இதன்போது பிரதேச சபையின் மற்றைய உத்தியோகத்தர் ஒருவர், சபையின் வேலையை செய்வதற்காக சபையின் முச்சக்கர வண்டியில் வெளியே செல்வதற்கு குறித்த பணியாளரான சாரதியை அழைத்தபோது அவர் அங்கு இல்லை. அதன்பின்னர் தான் தெரியும் அவர் முகாமைத்துவ உத்தியோகத்தரின் வீட்டுக்கு வர்ணம் பூச சென்ற விடயம்.
இதன்போது தனது வீட்டுக்கு வர்ணம் பூச அனுப்பிய அந்த முகாமைத்துவ ஊழியர் பதறிப்போனாராம். பின்னர் அந்த விடயம் ஒருவாறு மூடி மறைக்கப்பட்டுள்ளது.
அதே நரிசிங்கம் என்பவர் சபையின் பணியாளர்களாலும், உறுப்பினர்களாலும், மக்களாலும் கடுமையாக விமர்சிக்கப்படுகின்ற தவிசாளர் ஒருவரது வலது கையாளாம். அத்துடன் இதற்கு முன்னர் வேறொரு பிரச்சினைக்கு தவிசாளரின் பேச்சினை கேட்டு பொய்யான முறைப்பாடு ஒன்றும் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்தவராம். மேலும், அவர் தனக்கு கீழ் பணி புரிபவர்களை இதற்கு முன்னரும் பல தடவைகள் தவறான முறையில் பயன்படுத்தியவர் என தவிசாளருக்கு நெருக்கமான தரப்பினரிடமிருந்து ஆதாரபூர்வமாக கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த நரிசிங்கத்திற்கு ஏற்கனவே இடமாற்றம் கிடைத்துள்ள நிலையில் அவர் தனது செல்வாக்கினை பயன்படுத்தி இடமாற்றத்தில் செல்லாமல் அதே சபையில் குந்தியிருந்து இவ்வாறு தவறான காரியங்கள் செய்வதாக தவிசாளரின் மனைவியுடன் பணிபுரியும் சக பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
(அந்த உத்தியோகத்தர் விரும்பினால் சபையின் ஊழியர்களை தவறாக பயன்படுத்திய சிசிடிவி ஆதாரங்களை வெளியிடவும் நான் தயார்)

