“ஈரான் முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது”: அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் ட்ரம்ப் – 

“ஈரான் முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது”: அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் ட்ரம்ப் –

அமீரகத் துறைமுகங்களுக்கு ஈரான் விடுத்த மரண எச்சரிக்கை!

 

மத்திய கிழக்கில் ஈரான் மீதான ‘Operation Epic Fury’ போர் நடவடிக்கை புதிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று காலை அறிவித்துள்ளார்.

 

எனினும், இதற்குப் பதிலடியாக ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈரான் நடத்தியுள்ள தாக்குதல்கள் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

 

ட்ரம்ப்பின் ‘டீல்’ மற்றும் ஈரானின் நிலை

இன்று (மார்ச் 14) தனது ‘Truth Social’ தளத்தில் பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், “ஈரான் இப்போது முற்றாக நிலைகுலைந்துள்ளது. அவர்கள் எம்முடன் உடன்படிக்கை (Deal) செய்துகொள்ள முற்படுகின்றனர். ஆனால், அமெரிக்காவின் நலன்களுக்கு அப்பாற்பட்ட எந்தவொரு நிபந்தனையையும் நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார். ஈரானின் பொருளாதார மையமான கார் தீவு மீதான தாக்குதலுக்குப் பின்னரே ஈரான் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.

 

பாக்தாத் தூதரகம் மீது தாக்குதல்

ட்ரம்ப்பின் அறிவிப்பு வெளியான சில மணித்தியாலங்களில், ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகம் மீது ஈரான் ஆதரவுப் படைகள் பாரிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளன. இதில் தூதரக வளாகத்திலுள்ள ஹெலிபேட் (Helipad) தளம் பலத்த சேதமடைந்துள்ளதுடன், அங்கிருந்து கரும்புகை மேலெழும்புவதைச் சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

 

அமீரகத் துறைமுகங்களுக்கு எச்சரிக்கை

மற்றொரு அதிரடி நடவடிக்கையாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துபாய் மற்றும் அபுதாபி துறைமுகங்களுக்கு அருகே வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு ஈரான் இராணுவம் எச்சரித்துள்ளது. அத்துறைமுகங்களிலுள்ள அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதால், பொதுமக்கள் அங்கிருப்பதைத் தவிர்க்குமாறு ஈரான் விடுத்த இந்த எச்சரிக்கை வளைகுடா நாடுகளில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலதிக அமெரிக்கப் படைகள் குவிப்பு

யுத்தம் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, பென்டகன் மேலும் 5,000 அமெரிக்க வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பியுள்ளது. அத்துடன் ‘USS Tripoli’ என்ற பிரம்மாண்டமான போர்க்கப்பலும் அப்பிராந்தியத்தை நோக்கிப் புறப்பட்டுள்ளது. இதுவரை நிகழ்ந்துள்ள மோதல்களில் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin