மீண்டும் சுட்டெரிக்க வரும் கதிர்வெம்மையலை: ஜூலை 4, 5 வார இறுதியில் நம்மை அச்சுறுத்தக் காத்திருப்பது என்ன?

பத்து நாட்களுக்கும் மேலாகப் பிரான்சு நாட்டை வாட்டி வதைத்த பெருவெப்பத்தின் சுவடுகள் இன்னும் முழுமையாக மறையாத நிலையில், தெற்குப் பகுதியிலிருந்து மீண்டும் ஒரு கதிர்வெம்மையலை (Canicule) சீறிப்பாயத் தயாராகி வருகிறது.

கொளுத்தும் வெயிலிலிருந்து மக்களுக்குக் கிடைத்த இந்தச் சிறு ஓய்வு அதிக நாள்களுக்கு நீடிக்காது. இந்த வார இறுதியில் மீண்டும் ஒரு கொடிய வெப்ப அலை நாட்டைத் தாக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் (Météo-France) எச்சரித்துள்ளது.

சனிக்கிழமை (ஜூலை 4): தெற்குப் பகுதிகளில் கதிரவன் தன் முழு வீரியத்தையும் காட்டுவான். Perpignan நகரில் வெப்பமானி 34 °C அளவைக் காட்டும். Toulouse மற்றும் Montpellier நகரங்களில் 33 °C வெப்பம் தகிக்கும். நாட்டின் மையப்பகுதிகளான Bourges மற்றும் Auxerre நகரங்களில் 30 °C ஆக வெப்பம் பதிவாகும்.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5): கதிரவனின் ஆட்சி நாடு முழுவதும் விரிவடையும். Bordeaux நகரில் உச்சமாக 35 °C அனல் கொளுத்தும். Montpellier, Toulouse மற்றும் Montélimar ஆகிய பகுதிகளில் 34 °C வெப்பம் நிலவும். அதேவேளையில், வடக்குப் பகுதிகளான Lille மற்றும் Amiens நகரங்களில் மட்டும் சற்றுக் கருணை காட்டி 26 °C என்ற இதமான வானிலை நிலவும்.

நாட்டின் தெற்குப் பகுதியிலிருந்து உருவாகும் உயர் வளிமண்டல அழுத்தமே (Anticyclone) இந்த நிலைக்குக் காரணமாகும். வறண்ட மற்றும் சூடான காற்றைக் கீழ்நோக்கித் தள்ளும் இந்த நிகழ்வால், தெற்குப் பகுதிகளில் ‘செம்மஞ்சள் நிற எச்சரிக்கை’ (Vigilance orange) விடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 70 விழுக்காடு வரை அதிகரித்துள்ளன.

வெப்பம் சற்றுத் தணிந்திருந்த இந்தச் சிறிய இடைவெளியிலும் போதிய மழைப்பொழிவு இல்லாததால், மண்ணின் ஈரப்பதம் முற்றிலுமாக வறண்டுள்ளது. இது நிலத்தின் வறட்சியை அதிகப்படுத்துவதோடு, காட்டுத்தீ ஏற்படுவதற்கான அபாயத்தையும் பன்மடங்கு பெருக்கியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கல் கவலை தெரிவித்துள்ளனர் .

தென்கிழக்குப் பகுதியின் நான்கு மாவட்டங்கள் இன்னமும் செம்மஞ்சள் நிற எச்சரிக்கையிலேயே தொடர்கின்றன. வருகிற ஜூலை 14 ஆம் நாள் வரை இத்தகைய கொடிய வெப்பம் மீண்டும் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகச் சூழலியல் துறை அமைச்சர் மோனிக் பார்புட் (Monique Barbut) விடுத்துள்ள எச்சரிக்கை, கோடைக்காலக் கொண்டாட்டங்களில் அனலைக் கூட்டியுள்ளது.

Recommended For You

About the Author: admin