இலங்கை சைக்கிள் ஓட்டப் போட்டி சம்மேளனம், பூப்பந்தாட்ட சங்கத்தின் பதிவுகள் இடைநிறுத்தம்!
இலங்கையின் சைக்கிள் ஓட்டப் போட்டி சம்மேளனம் மற்றும் இலங்கை பூப்பந்தாட்ட சங்கம் ஆகியவற்றின் பதிவுகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தி, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டுள்ளார்.
ஒக்டோபர் 20ஆம் திகதியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தல்கள், 1973ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 32 மற்றும் 33ஆம் பிரிவுகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்விரு விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை முன்னெடுப்பதற்காகத் தனித்தனியான மாற்றக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.
மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துதல், புதிய யாப்புகளை உருவாக்குதல், தகுதியான உறுப்பினர்களைப் பதிவு செய்தல் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்துதல் ஆகியவை இக்குழுக்களின் பொறுப்புகளாகும்.
சைக்கிள் ஓட்டப் போட்டி மாற்றக் குழுவுக்கு அனுர மஹாராச்சி தலைமை தாங்கவுள்ளதுடன், இலங்கை பூப்பந்தாட்ட மாற்றக் குழுவுக்கு எம்.எச்.எஸ்.எஸ். குசும் குமார தலைமை தாங்கவுள்ளார்.
புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்படும் வரை குறித்த அமைப்புகளை இக்குழுக்கள் நிர்வகிக்கும். புதிய யாப்புகள் பதிவு செய்யப்பட்டதிலிருந்து 90 நாட்களுக்குள் தேர்தல்களை நடத்தவும் வர்த்தமானி அறிவித்தல்கள் உத்தரவிட்டுள்ளன.

