பிரான்ஸில் கட்டுக்கடங்காமல் வெடித்துள்ள மக்கள் போராட்டம்! – இன்று 600க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணிகள்!
பிரான்ஸில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராகத் தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாக அக்டோபர் 24 அன்று நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான போராட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன.
மஞ்சள் அங்கிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து 646 இடங்களில் வீதி மறியல், இரயில் நிலைய முற்றுகை மற்றும் பேரணிகளை ஒருங்கிணைத்துள்ளனர்.
கடந்த வாரப் போராட்டங்களில் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து, இம்முறை லியோன், மார்சேய் மற்றும் நீஸ் ஆகிய முக்கிய நகரங்களில் போராட்டங்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறை மற்றும் ஆயுதப் படைகளின் ரோந்துப் பணிகள் 20 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.
வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிறுவர்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், சில நகரங்களில் முழுமையான ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வன்முறை மற்றும் பேரணிகளை ஒருங்கிணைக்கப் பயன்படும் சோஷியல் மீடியா செயலிகளைத் தற்காலிகமாக முடக்குவது குறித்தும் பிரெஞ்சு அரசு பரிசீலித்து வருகிறது.
தொழிற்சங்கங்கள் தடையைத் தாண்டி சிவப்பு அங்கிகளை அணிந்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
நிலைமையைச் சமாளிக்கக் குறைந்தபட்ச ஊதிய உயர்வை முன்கூட்டியே வழங்குவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
கடந்த வார வன்முறைகளின் போது 2,000க்கும் மேற்பட்ட கடைகள் சூறையாடப்பட்டு, பல கோடிக்கணக்கான யூரோக்கள் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
வன்முறைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 2,700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 217 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

