உலகம் முழுவதும் பல இணையதளங்கள் முடக்கம்: PHP மென்பொருளில் தீவிர பாதுகாப்புக் குறைபாடு!
PHP நிரலாக்க மொழியில் கண்டறியப்பட்ட இரண்டு தீவிர பாதுகாப்புக் குறைபாடுகளைச் சரிசெய்ய புதிய மென்பொருள் புதுப்பிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகின் பல நாடுகளில் அரச மற்றும் தனியார் இணையதளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
இணையதளங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் PHP மென்பொருளுக்கான பாதுகாப்புப் புதுப்பிப்புகளை உடனடியாக நிறுவுமாறு அதன் உருவாக்குநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உலகளாவிய இணையதளங்களில் சுமார் 70 சதவீதம் PHP தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான Cloudflare தெரிவித்துள்ளது. WordPress மற்றும் Magento போன்ற பிரபலமான தளங்களும் இந்தத் தொழில்நுட்பத்தைச் சார்ந்துள்ளன.
பிரான்ஸ், டென்மார்க், பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளில் பல இணையதளங்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகத் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. பிரித்தானியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் சைபர் பாதுகாப்பு அமைப்புகளும் உடனடி புதுப்பிப்புகளை மேற்கொள்ளுமாறு எச்சரித்துள்ளன.
குறித்த பாதுகாப்புக் குறைபாடுகள் CVSS v4.0 அளவுகோலில் 10க்கு 9.2 என்ற தீவிரத்தன்மை மதிப்பீட்டைப் பெற்றுள்ளன. இக்குறைபாடுகளைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட சேவையகங்களில் அனுமதியின்றி தீங்கிழைக்கும் நிரல்களைச் செயல்படுத்தும் அபாயம் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சைபர் அவசரநிலைப் பதிலளிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உடனடியாக பாதுகாப்புப் புதுப்பிப்புகளை நிறுவ முடியாத நிறுவனங்கள், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை தங்களது இணையதளங்களைத் தற்காலிகமாக முடக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

