அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நவநீதம் பிள்ளைக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நவநீதம் பிள்ளைக்கு முதல்வர் விஜய் வாழ்த்து

2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்க வாழ் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு முதல்வர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் மனித உரிமைகள், உலக அமைதி மற்றும் நீதிக்காக அயராது குரல் கொடுத்து வரும் நவநீதம் பிள்ளைக்கு இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளிப்பதாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க மண்ணில் இனவெறிக்கு எதிரான சட்டப் போராட்டத்தின் வழியாகத் தனது பொது வாழ்வைத் தொடங்கிய நவநீதம் பிள்ளை, அந்நாட்டின் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், சர்வதேச நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையராகவும் பதவி வகித்து சர்வதேச சட்டங்களை மேம்படுத்திய பெருமைக்குரியவர்.

தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கலை முடிவுக்குக் கொண்டுவந்த மறைந்த முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்காக நீதிமன்றத்தில் வாதாடிய பெருமையும் இவருக்கு உண்டு.

தற்போது 85 வயதாகும் இந்தியத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை, அமைதி மற்றும் சர்வதேச சட்டப் பணிகளுக்காக இந்த உயரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்காக மொத்தம் 287 பேர் முன்மொழியப்பட்டிருந்த நிலையில் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1.2 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடைய இந்த விருது எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

Recommended For You

About the Author: admin