ஷிரந்தி ராஜபக்ஷவை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப்படுத்திய நிலையில் இவ்வாறு அவர் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
‘சிரிலிய சவிய’ அமைப்பின் மூலம் ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலைக்கு சி.டி. ஸ்கேனர் (CT Scanner) இயந்திரம் ஒன்று வழங்கப்படும் எனக் கூறி, அதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து10 மில்லியன் ரூபாய் நிதியைப் பெற்றுக்கொண்டு, அக் குறிப்பிட்ட இயந்திரத்தை வழங்காமல் அந்த அரசாங்கப் பணத்தைக் குற்றவியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்தமை மூலம் ஊழல் புரிந்தமை மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரிலேயே அவர் இன்று (07) முற்பகல் கைது செய்யப்பட்டார்.

