14 நிமிடங்களில் 30 பரிவர்த்தனைகள் ஊடாக கணக்கிலிருந்து ரூ.28 இலட்சம் மாயம்

14 நிமிடங்களில் 30 பரிவர்த்தனைகள் ஊடாக கணக்கிலிருந்து ரூ.28 இலட்சம் மாயம்: கட்டமைப்பில் குறைபாடு இல்லை என வங்கி விளக்கம்

ஓய்வுபெற்ற இராணுவ செவிலியர் அதிகாரி ஒருவரின் இலங்கை வங்கிக் கணக்கிலிருந்து வெறும் 14 நிமிடங்களுக்குள் 30 பரிவர்த்தனைகள் ஊடாக 28 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் சட்டவிரோதமாகப் பரிமாற்றப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

 

எனினும், குறித்த பணப்பரிவர்த்தனைகள் உரிய அங்கீகாரத்துடனேயே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தமது வங்கியின் கட்டமைப்புக்களிலோ அல்லது டிஜிட்டல் வங்கிச் செயலிகளிலோ எவ்விதப் பாதுகாப்புக் குறைபாடுகளோ அல்லது தொழில்நுட்பக் கோளாறுகளோ ஏற்படவில்லை எனவும் இலங்கை வங்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

 

இலங்கை வங்கியின் பத்தேகம கிளையில் குறித்த ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் தனது வங்கிக் கணக்கைப் பராமரித்து வந்துள்ளார். சொந்தமாக வீடு அமைப்பதற்காகத் தனது ஓய்வூதியத்தை அடமானம் வைத்து இலங்கை வங்கியிலேயே பெறப்பட்ட 44 இலட்சம் ரூபாய் கடன்தொகையின் ஒரு பகுதியே இவ்வாறு கணக்கிலிருந்து மாயமாகியுள்ளதாக அவரது குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

 

கடந்த ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி அதிகாலை 1.24 மணி முதல் 1.38 மணி வரையான 14 நிமிட இடைவெளியில், தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் 28 முறைகளும், அதனைத் தொடர்ந்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 19 ஆயிரம் ரூபாய் வீதம் மேலும் இரண்டு முறைகளும் என மொத்தம் 2,869,000 ரூபாய் பணம் பல்வேறு கணக்குகளுக்குப் பரிமாற்றப்பட்டுள்ளது.

 

தமது கையடக்கத் தொலைபேசிக்கு அடுத்தடுத்து வந்த குறுஞ்செய்திகளை (SMS) அவதானித்த உடனேயே அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக இலங்கை வங்கியின் அவசர தொலைபேசி இலக்கத்தை (Hotline) அழைத்து வங்கிக் கணக்கையும் அட்டையையும் முடக்குமாறு கோரியுள்ளனர். எனினும், அந்தக் கோரிக்கைக்குப் பின்னரும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று நிதி முழுமையாக இழக்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

 

மறுநாள் காலையில் பத்தேகம வங்கிக் கிளைக்குச் சென்று முறையிட்ட போதிலும், தங்களால் இனி எதுவும் செய்ய முடியாது என்றே அதிகாரிகள் பதிலளித்ததாகப் பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உத்தியோகத்தரின் மனைவி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

 

Recommended For You

About the Author: admin