ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘இணை உறுப்புரிமை!!’
அந்தஸ்தைக் கோரும் கனடா: முன்வைக்கப்படும் புதிய யோசனையின் பின்னணி!
ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) முதலாவது ‘இணை உறுப்புரிமை’ (membre associé) நாடாக கனடாவை இணைத்துக்கொள்வதற்கான புதிய யோசனை சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த யோசனையின் பின்னணி மற்றும் இதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்த முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
வரலாற்றுச் சிறப்புமிக்க அழைப்பும் புதிய சட்டகட்டமைப்பும்
ஐரோப்பிய ஆணைக்குழுவின் (Commission européenne) தலைவியான உர்சுலா வொன் டெர் லெயென் (Ursula von der Leyen), ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கனடாவுக்கும் இடையிலான உறவை உச்சக்கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் நோக்கில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அழைப்பை விடுத்துள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள கனேடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), இந்த அழைப்பைத் தாம் வரவேற்பதாகவும், இதுவொரு ‘எதிர்காலத்திற்கான கூட்டமைப்பு’ (alliance pour l’avenir) எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
உக்ரைன், மோல்டோவா போன்ற நாடுகள் கோரும் முழுமையான உறுப்புரிமைக்கான (adhésion) வழமையான செயன்முறை இதுவல்ல. ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய ஒப்பந்தங்களில் ‘இணை உறுப்புரிமை’ என்றொரு சட்டகட்டமைப்பு கிடையாது.
எனவே, கனடா போன்ற ஐரோப்பியக் கண்டத்திற்கு வெளியே உள்ள, ஆனால் ஐரோப்பாவுடன் நெருங்கிய அரசியல் மற்றும் பொருளாதாரத் தொடர்புகளைப் பேண விரும்பும் நாடுகளுக்காகப் புதியதொரு கட்டமைப்பை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இறைமை குறித்த அச்சமும் கனேடிய நிலைப்பாடும்
‘இணை உறுப்புரிமை’ என்ற சொற்பிரயோகம் தமது நாட்டின் இறைமையை (souveraineté) ஐரோப்பிய ஒன்றியத்திடம் கையளிப்பதாக அமைந்துவிடக் கூடாது என்பதில் கனேடியத் தரப்பு மிகவும் உறுதியாக உள்ளது.
அதனாலேயே கனேடியப் பிரதமர் இதனை ‘எதிர்காலத்திற்கான கூட்டமைப்பு’ என அழைக்கவே விரும்புகிறார். “எந்த மொழியைப் பேச வேண்டும், யாருடன் சர்வதேச ஒப்பந்தங்களைச் செய்ய வேண்டும் என யாரும் எமக்குக் கட்டளையிட முடியாது”
என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த உடன்படிக்கையின் இறுதி வடிவம் கனேடிய நாடாளுமன்றத்தின் வாக்கெடுப்பிற்குப் பின்னரே உறுதிசெய்யப்படும்.
பொருளாதார நோக்கங்களும் கனிமவளத் தேவையும்
இந்த புதிய உறவின் முக்கிய நோக்கம் வர்த்தக மற்றும் பொருளாதார மேம்பாடாகும். உலகளாவிய சக்தி மாற்றத்திற்குத் (transition énergétique) தேவையான 10 முக்கிய கனிமவளங்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் கனடாவும் ஒன்றாகும்.
சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்கும் நோக்கில் ஐரோப்பாவுக்குத் தேவையான நம்பகமான கனிமவள விநியோகத்தைக் கனடாவால் வழங்க முடியும் என்பதே இதன் பிரதான ஈர்ப்பாகும்.
இதற்கு மேலதிகமாக, ‘எராஸ்மஸ்+’ (Erasmus+) மாணவர் பரிமாற்றத் திட்டம் மற்றும் உக்ரைனுக்கான 90 பில்லியன் யூரோ கடனுதவித் திட்டம் ஆகியவற்றிலும் இணையக் கனடா ஆர்வம் காட்டுகிறது.
ஒற்றைச் சந்தையும் சவால்களும்
இந்த உடன்படிக்கை மூலம், அட்லாண்டிக் பெருங்கடலின் இருபுறமும் உள்ள இளைஞர்கள் சுதந்திரமாகப் பயணிக்கவும், கல்வி கற்கவும், பணியாற்றவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் எனக் கனடா கோருகிறது.
அத்துடன், நிதிச் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த சந்தை ஒன்றையும் அது எதிர்பார்க்கிறது. ஆயினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தையின் (marché unique) பிரதான சுதந்திரங்களான பொருட்கள், சேவைகள்,
மூலதனம் மற்றும் மனிதர்களின் சுதந்திரமான நடமாட்டம் ஆகியவற்றைத் தமக்குத் தேவையானபடி மட்டும் பிரித்தெடுக்க (à la carte) ஐரோப்பிய ஒன்றியம் ஒருபோதும் அனுமதிக்காது என்பதே நிதர்சனம். எனவே, இந்த நிபந்தனைகளில் எவ்வகையான விட்டுக்கொடுப்புகள் நிகழப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

