ஐரோப்பிய நாடுகளின் உணவுச் சங்கிலி மீது சைபர் தாக்குதல்!
பல்பொருள் அங்காடிகளின் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள். இந்த வித்தியாசமான தாக்குதல் ஏன் எப்படி நடக்கிறது?
பல நவீன பல்பொருள் அங்காடிகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளும் (Fridges), உறைவிப்பான்களும் (Freezers) இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் தொழில்நுட்பப் பணியாளர்கள் தொலைவிலிருந்தே அவற்றின் வெப்பநிலையைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும். ஆனால் இதே வசதியைப் பயன்படுத்தி இணையத் தாக்குதலாளர்கள் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்குள் ஊடுருவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குளிரூட்டும் அமைப்பின் செயல்பாடுகளை மாற்றி, வெப்பநிலையை உயர்த்துவது அல்லது Defrost Mode போன்ற செயல்பாடுகளைத் தவறாகப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குளிரூட்டல் பாதிக்கப்படுவதால் இறைச்சி, மீன், பால் பொருட்கள், தயாரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் உறைந்த உணவுகள் ஆகியவை பாதுகாப்பற்ற நிலைக்குச் செல்லக்கூடும்.
இதன் விளைவாக, சில கடைகள் பாதிக்கப்பட்ட உணவுப் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் மிகவும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், ஒரு கடையின் வெளிப்புறச் செயல்பாடுகள் வழக்கம்போல இருந்தாலும், அதன் குளிர்சாதன அமைப்புகள் உள்ளிருந்து தாக்கப்பட்டிருக்கலாம் என்பதாகும்.
இதுவரை இந்தத் தாக்குதல்களை நடத்தியவர்கள் யார் என்பது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. பிரான்சில் ஒக்டோபர் மாதம் ஆரம்பித்த இந்த தாக்குதல் இதுவரை லண்டன் உட்பட 10 ஐரோப்பிய நாடுகளில் நடந்துள்ளது.
ஐரோப்பிய மக்கள் குறைந்தது 72 மணி நேரத்திற்குத் (3 நாட்கள்) தேவையான உலர் உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வீட்டில் வைத்திருக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்துள்ளமையானது இதன் தீவிரத்தை காட்டுகிறது.
இணைய மயப்படுத்தப்பட்ட ஐரோப்பிய சந்தை உணவை குறி வைத்து மேற்கொள்ளப்படும் இந்த தாக்குதல் விசித்திரமாகவும் ஆனால் தொடர்ந்தால் பாரதூரமாகவும் ஆகலாம்!
அவசரகாலத்திற்கு ஆயத்தமாக இருப்பது தமிழருக்கு புதிதில்லை. புலம்பெயர் தமிழர்களே தயாராக இருங்கள்!

