மீண்டும் அதிகரிக்குமா மின்சாரக் கட்டணம்: வெளியான முக்கிய அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக இலங்கையின் தேசிய மின்கட்டமைப்பு இயக்குனர் நிறுவனம் (National System Operator) 2.88 சதவீத கட்டண அதிகரிப்பை முன்மொழிந்துள்ளது.
எனினும், இந்தக் காலப்பகுதியில் 1.46 சதவீத அதிகரிப்பை மட்டுமே நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) பரிந்துரைத்துள்ளது. இதனால், மின்சாரக் கட்டணத்தில் எவ்வளவு அதிகரிப்பு அமுல்படுத்தப்படும்? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இலங்கையின் தேசிய மின்கட்டமைப்பு இயக்குனர் நிறுவனம் முன்வைத்துள்ள 2.88 சதவீத அதிகரிப்புக்கும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ள 1.46 சதவீத அதிகரிப்புக்கும் இடையில் வேறுபாடு காணப்படுகிறது. எனினும், ஆணைக் குழுவின் பரிந்துரையே இறுதித் தீர்மானம் அல்ல.
இதுதொடர்பாக நாளை (05.11.2026) நடைபெறவுள்ள பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்தின் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படுமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுத் தமது கருத்துக்களை முன்வைக்க விரும்புவோர் முன்பதிவு செய்வதற்காக 0770399119 எனும் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ளுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கேட்டுள்ளது.

