விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் முறைகேடு: பொது சுகாதார பரிசோதகர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், பொது நிதி முறைகேடு மற்றும் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாகச் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது.
இது தொடர்பில் முன்னதாக முன்வைக்கப்பட்ட புகார்கள் குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த முறைகேடுகளை வெளிப்படுத்திய சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் பி.எச். வீரசேகர தன்னிச்சையாக இடமாற்றம் செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட அதிகாரியை மீண்டும் பணியில் அமர்த்த வலியுறுத்தி, பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகஸ்ட் 20 முதல் விமான நிலைய தனிமைப்படுத்தல் மற்றும் டெங்கு பரிசோதனை பணிகளில் இருந்து விலகியதுடன், ஆகஸ்ட் 21 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தையும் அறிவித்துள்ளனர். அமைச்சின் பதிலைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

