விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு வருவதற்கு ரூ.7000 கட்டணத்தில் விரைவில் ட்ரோன் சேவை அறிமுகம்.
விரைவில் பயணிகள் போக்குவரத்து ட்ரோன்களை அறிமுகப்படுத்தும் தனது திட்டத்தை சீன 🇨🇳 தனியார் நிறுவனமான EHANG நிறுவனம் தனது திட்டத்தை அரசாங்கத்திடம் முன் வைத்துள்ளது.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில், அமைச்சர் அனுரா கருணாதிலக்க மற்றும் Ehang நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி கொனோர் யாங், செயல்பாடுகள் பொது மேலாளர் சியாவோ நா லீ உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவுடன் ஒரு சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
முன்மொழியப்பட்ட இந்த சேவையானது சுற்றுலா, அவசரகால மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள், மற்றும் கடல்சார் தேவைகளுக்கு ஆதரவளிக்கப் பயன்படுத்தப்படலாம் என்று அமைச்சர் கூறினார்.
வணிகரீதியான பயணிகள் ட்ரோன் செயல்பாடுகளுக்கு, விமானப் பாதுகாப்பு, ஒழுங்குமுறைகள், வான்வழிப் போக்குவரத்து மேலாண்மை, அவசரகால நடைமுறைகள், இணையப் பாதுகாப்பு, தரவுப் பாதுகாப்பு மற்றும் நியமிக்கப்பட்ட தரையிறங்கும் தளங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய முறையான ஒப்புதல்கள் தேவைப்படும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.
மேலும், சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், பாதுகாப்பு அமைச்சகம், இலங்கை விமானப்படை, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், முதலீட்டுச் சபை, கொழும்பு துறைமுக நகர ஆணையம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ஆணையம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு தேவைப்படும்.
ஈஹாங் பிரதிநிதிகள் தங்களது மின்சார செங்குத்து புறப்பாடு மற்றும் தரையிறங்கும் (eVTOL) விமானம் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கினர்.
விளக்கக்காட்சியின்படி, இரண்டு பயணிகள் பயணிக்கும் விமானம் ஒன்று 16 சுழலிகள்(Fan), 12 மின்கலத் தொகுப்புகள் (Battery) மற்றும் மூன்று விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் பொருத்தப்பட்டு, செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு மையக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து(Central Control Point) தன்னாட்சி (Automatically)முறையில் இயக்கப்படக்கூடியதாக உள்ளது.
சிகிரியா மற்றும் பிதுரங்கலாவைச் சுற்றியுள்ள விமானப் பயணங்கள், அத்துடன் கொழும்பு மற்றும் Fort City க்கு வழங்கப்படும் சேவைகள் ஆகியவை விவாதிக்கப்பட்ட சாத்தியமான சுற்றுலாப் பயன்பாடுகளில் அடங்கும். துறைமுக நகரத்திற்குள் ஒரு செயல்விளக்க மண்டலத்தை நிறுவுவதும் முன்மொழியப்பட்டது.
இத்தகைய சேவையின் கீழ், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்குச் செல்லும் ஒரு பயணியிடம் ஒரு பயணத்திற்கு சுமார் 20 முதல் 30 அமெரிக்க டாலர்கள் வரை கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று ஈஹாங் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சாத்திய ஆய்வுகள் தற்பொழுது நடத்தப்பட்டு வருகின்றன.எந்தவொரு வணிகச் செயல்பாடுகளும் தொடங்குவதற்கு முன்பு ஒழுங்குமுறை ஒப்புதல்கள் தேவைப்படுகின்றன.

