15 வயதுக்குட்பட்டோருக்கான சமூக வலைத்தளத் தடை சட்டம் நீக்கம் : மக்ரோனின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட அரசியலமைப்பு நீதி மன்றம்!
15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக வலைத்தளங்களை முற்றிலுமாகத் தடை செய்யும் சட்ட மசோதாவைப் பிரான்சின் ‘அரசியலமைப்பு மன்றம்’ (Conseil constitutionnel) அதிரடியாக நீக்கம் செய்துள்ளது.
சிறுவர்களின் “கருத்துச் சுதந்திரத்தில் இது ஒரு சமநிலையற்ற அத்துமீறல்” (Atteinte disproportionnée) எனக் கூறி இந்த அதிரடித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் மனநலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில், அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் (Emmanuel Macron) நேரடி முன்னெடுப்பில் இந்தக் கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டது.
வருகிற செப்டம்பர் 1-ஆம் திக தி முதல் டிக்டாக் (TikTok), இன்ஸ்டாகிராம் (Instagram), வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட அனைத்துத் தளங்களுக்கும் இது பொருந்தும் வகையில் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் இந்த மசோதா பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், அரசியலமைப்பு மன்றத்தின் நீதிபதிகள் (Les Sages) இதனை ஏற்க மறுத்துவிட்டனர். “குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்தான் என்றாலும், ஆபத்துகளே இல்லாத மற்ற சாதாரண இணையச் சேவைகளையும் ஒட்டுமொத்தமாகத் தடை செய்வது சிறுவர்களின் கருத்து மற்றும் தகவல் தொடர்பார்ந்த சுதந்திரத்திற்கு எதிரான அத்துமீறலாகும்” என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தங்களுடைய இந்தச் சட்டம்’ முடக்கப்பட்டதால் அதிபர் மக்ரோன் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், தனது பதவிக்காலத்தின் முடிவான 2027-ஆம் ஆண்டு வசந்த காலத்திற்குள் இச்சட்டத்தை எப்படியாவது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் அதிபர் உறுதியாக உள்ளார்.
அதற்காக, அரசியலமைப்பு மன்றத்தின் தீர்ப்பையும் ஐரோப்பியச் சட்ட வரம்புகளையும் கருத்தில் கொண்டு, “சட்டப்பூர்வமாக எந்த ஓட்டையுமில்லாத” (Juridiquement robuste) புதிய வரைவை உடனடியாக உருவாக்குமாறு பிரதமர் செபாஸ்டியன் லெகார்னுவை (Sébastien Lecornu) அதிபர் மக்ரோன் பணித்துள்ளார்.
(குறிப்பு: பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் (Lycée) அலைபேசிகளைத் தடை செய்யும் சட்டப் பகுதிக்கு அரசியலமைப்பு மன்றம் எவ்விதத் தடையையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)

