சார்சல் (Sarcelles) சந்தையில் அதிகாரிகளின் அதிரடி

சார்சல் (Sarcelles) சந்தையில் அதிகாரிகளின் அதிரடி : 1.3 தொன் போலிப் பொருட்கள் பறிமுதல்… சுகாதாரமற்ற உணவகத்திற்குப் பூட்டு!

வால்-து -வாஸ் (Val-d’Oise) மாவட்டத்தின் சார்சல் (Sarcelles) சந்தையில், நுகர்வோர் பாதுகாப்புப் பிரிவினரும் (DDPP95) தேசியக் காவல் துறையினரும் இணைந்து இன்று காலை மாபெரும் சோதனையை நடத்தினர்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் நேரடிப் பார்வையில் இந்த அதிரடி வேட்டை நடைபெற்றது.

இந்தச் சோதனையின் போது, புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்களைத் தாங்கிய 1.3 தொன் எடையுள்ள போலிப் பொருட்கள் (Contrefaçons) பறிமுதல் செய்யப்பட்டன. இதில் போலி நகைகள், வாசனைத் திரவியங்கள், ஆடைகள் மற்றும் கைப்பைகள் அடங்கும்.

மேலும், மனிதர்கள் உண்பதற்குத் தகுதியற்ற 110 கிலோ அளவிலான கெட்டுப்போன உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டன. இந்த விதிமீறல்கள் தொடர்பாக 3 பேர் காவல் துறையினரால்
கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுகாதார விதிகளைக் கடுமையாக மீறிய ‘Thanh Tan’ என்ற ஆசிய உணவகம் ஒன்றை உடனடியாக மூடுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இறைச்சி மற்றும் உணவுப் பொருட்களை உரிய வெப்பநிலையில் பராமரிக்காததும், அவற்றின் தயாரிப்பு ஆதாரங்களை முறையாக வைத்திருக்காததுமே இதற்குக் காரணமாகும்.

கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாவட்டத்தில் 1,914 சோதனைகளை அரசு அதிகாரிகள் நடத்தியுள்ளதாக நிருவாகம் தெரிவித்துள்ளது

Recommended For You

About the Author: admin