அமெரிக்காவின் ஸ்டார்லிங்கிற்குப் போட்டியாக களமிறங்கும் சீனா!!
தனியார் ரொக்கெட் மூலம் 10 புதிய செய்மதிகள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சல்!
அமெரிக்காவின் ‘ஸ்டார்லிங்க்’ (Starlink) செய்மதி இணைய சேவைக்கு நேரடிப் போட்டியாக, சீனா முன்னெடுத்து வரும் ‘சியான்ஃபான்’ (Qianfan) செய்மதித் திட்டத்தின் கீழ் மேலும் 10 புதிய செய்மதிகள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.
சீனாவின் தனியார் விண்வெளி நிறுவனமான ‘லேண்ட்ஸ்பேஸ்’ (LandSpace) உருவாக்கிய ‘Zhuque-2E’ ரொக்கெட் மூலம் இந்த செய்மதிகள் செலுத்தப்பட்டுள்ளன.
சீனாவில் தனியார் நிறுவனத்தின் ரொக்கெட் மூலமாக சியான்ஃபான் திட்டத்திற்கான செய்மதிகள் ஏவப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
இந்த புதிய ஏவுதலின் மூலம் சியான்ஃபான் குழுமத்தின் மொத்த செய்மதிகளின் எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது.
2030-க்குள் 15,000 செய்மதிகள்: சீனாவின் மெகா திட்டம்சீனாவிலும் சர்வதேச சந்தைகளிலும் அதிவேக பிராட்பேண்ட்
இணைய சேவையை வழங்கும் நோக்கில், 2030-ஆம் ஆண்டுக்குள் சுமார் 15,000 செய்மதிகளை விண்வெளியில் நிலைநிறுத்த சீனா திட்டமிட்டுள்ளது.
இந்த ஏவுதல் வெறும் 10 செய்மதிகள் தொடர்பானது மட்டுமல்லாது, வணிகரீதியான விண்வெளித் தொலைத்தொடர்பு சூழலை நோக்கி சீனா எடுத்து வைத்துள்ள முக்கிய நகர்வாகக் பார்க்கப்படுகிறது.
தனியார் ரொக்கெட் நிறுவனங்களின் வருகை ஏவுதல் செலவைக் குறைப்பதுடன், விண்வெளித் திட்டங்களை வேகப்படுத்தவும் உதவும்.
ஆரம்பகால செய்மதிகளில் காணப்பட்ட தொழில்நுட்பக் குறைபாடுகளைச் சரிசெய்து, ஏவுதல் வேகத்தை சீனா அதிகரிக்குமானால்,
சர்வதேச சந்தையில் ஸ்டார்லிங்கிற்கு இது வலுவான மாற்றாக உருவெடுக்கும் வாய்ப்புள்ளது.
உலகளவில் செய்மதி இணைய சேவையில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் ‘ஸ்டார்லிங்க்’ ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில்,
அதற்கு மாற்றாக சீனா தனது சொந்தக் கட்டமைப்பை அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியுடன் வேகமாக விரிவுபடுத்தி வருகின்றது.

