ஓகஸ்ட் 15 அரசு விடுமுறையில் வேலை செய்தால் ‘இரட்டிப்புச் சம்பளம்’ கிடைக்குமா? பிரான்சுத் தொழிலாளர் சட்டம் சொல்வது என்ன?

நாளை ஓகஸ்ட் 15 (L’Assomption – மாதா விண்ணேற்புப் பெருவிழா) பிரான்சில் அரசு விடுமுறை நாளாகும்.

பலருக்கு இது நீண்ட வார இறுதி விடுமுறையாக (Week-end prolongé) இருந்தாலும், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் உணவு உற்பத்தித் துறைகளில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வழக்கம் போல நாளையும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இவர்களுக்கு இரட்டிப்புச் சம்பளம் வழங்கப்படுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

பிரான்சுத் தொழிலாளர் சட்டத்தின்படி (Code du travail), ஆகஸ்ட் 15-ஆம் திகதி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ‘இரட்டிப்புச் சம்பளம்’ (Rémunération doublée) வழங்க வேண்டும் என்ற எவ்விதக் கட்டாய விதியும் இல்லை. மே 1 (தொழிலாளர் தினம்) போன்ற ஒரு சில நாட்களுக்கு மட்டுமே அந்தச் சட்டபூர்வமான உரிமை உண்டு.

எனவே, நாளைய தினம் வேலை செய்வோருக்கு வழக்கம் போலச் சாதாரண நாட்களுக்கான ஊதியமே வழங்கப்படும்.

தொழிலாளர் சட்டம் இரட்டிப்புச் சம்பளத்தை மறுத்தாலும், ஒருசில நிறுவனங்களில் உள்ள ‘கூட்டுத் தொழில் ஒப்பந்தங்கள்’ (Conventions collectives) தொழிலாளர்களுக்குச் சாதகமாக அமையலாம். அத்தகைய ஒப்பந்தங்கள் நடைமுறையில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு மட்டுமே இரட்டிப்புச் சம்பளமோ அல்லது மற்றொரு நாள் மாற்று விடுமுறையோ (Jour de congé supplémentaire) கிடைக்க வாய்ப்புள்ளது.

நிறுவனத்தின் அனுமதியோடு நாளை நீங்கள் விடுமுறை எடுத்தால், உங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுமா என்பது உங்கள் பணிமூப்பைப் (Ancienneté) பொறுத்தது.

நீங்கள் அதே நிறுவனத்தில் 3 மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வேலை செய்பவராக இருந்தால் சம்பளம் குறைக்கப்படாது; ஆனால் 3 மாதங்களுக்குக் குறைவான பணிமூப்பு கொண்ட புதிய அல்லது தற்காலிகத் தொழிலாளர்களின் சம்பளத்தில் நாளைய விடுமுறைக்கான ஊதியம் கத்தரிக்கப்படும்!

Recommended For You

About the Author: admin