10 ஆண்டுகாலக் காதல் பந்தம் திருமணத்தில் நிறைவு: ஜோர்ஜினா ரோட்ரிக்ஸை மணந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாகத் திகழும் கிறிஸ்டியானோ ரொனால்டோ , தனது நீண்டகாலக் காதலியும், அவருடன் வாழ்க்கைத்துணையாக கடந்த பத்தாண்டுகளாக வாழ்ந்து வரும் பிரபல மொடலுமான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸை (Georgina Rodríguez) திருமண பந்தத்தில் கரம்பிடித்துள்ளார்.

போர்த்துகல் நாட்டின் தலைநகர் லிஸ்பனுக்கு அருகிலுள்ள கடற்கரை நகரமான காஸ்காய்ஸில் (Cascais) நேற்று (ஒகஸ்ட் 11) இவர்களது திருமணம் சிவில் முறைப்படி மிக நெருங்கிய சொந்தங்களின் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்று முடிந்தது.

இத்திருமண நிகழ்வில் இவர்களது ஐந்து குழந்தைகளும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர். போர்த்துகீசிய ஊடகங்கள் இத்திருமணத்தை “ஆண்டின் மிகச்சிறந்த திருமணம்” (Wedding of the Year) எனக் கொண்டாடி வருகின்றன.

தான் திருமண பந்தத்தில் இணைந்ததை ரொனால்டோ தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மனைவியின் கையைப் பற்றியபடி இருவரும் திருமண மோதிரம் அணிந்திருக்கும் நெகிழ்ச்சியான புகைப்படத்தைப் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான விருப்பங்களையும் (Likes) வாழ்த்துகளையும் ரசிகர்கள் குவித்து வருகின்றனர்.

ஆடை விற்பனையகத்தில் தொடங்கிய சுவாரசியக் காதல் கதை!

கடந்த 10 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வரும் இந்த ஜோடியின் காதல் கதை மிகவும் சுவாரசியமானது. 2016 ஆம் ஆண்டு ரொனால்டோ ரியல் மட்ரிட் (Real Madrid) கழகத்திற்காக விளையாடிக்கொண்டிருந்த காலத்தில், ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டிலுள்ள பிரபல ‘குச்சி’ (Gucci) ஆடை விற்பனையகத்தில் விற்பனைப் பிரதிநிதியாக ஜோர்ஜினா பணியாற்றி வந்தார்.

அங்கு வாடிக்கையாளராக வந்த ரொனால்டோவை முதன்முதலில் சந்தித்த தருணத்திலேயே இருவருக்கும் இடையே காதல் அரும்பியது. சாதாரண ஒரு விற்பனையகப் பெண்ணாக இருந்த ஜோர்ஜினா, இன்று சர்வதேச அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட பிரபல மொடலாகவும், சமூக வலைத்தளங்களின் முன்னணி செல்வாக்கு செலுத்துபவராகவும் (Influencer) உருவெடுத்துள்ளார்.

இவர்களது காதலின் அடுத்த கட்டமாக, கடந்த ஆண்டு ஒகஸ்ட் 11 ஆம் திகதி ரொனால்டோ தனக்கு வைர மோதிரம் வழங்கி நிச்சயதார்த்தம் செய்ததை ஜோர்ஜினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

சரியாக ஒரு வருடம் கழித்து அதே ஒகஸ்ட் 11 ஆம் திகதி இவர்கள் தங்களது திருமண பந்தத்தை உத்தியோகபூர்வமாக உறுதிசெய்துள்ளனர்.

மைதானத்திற்கு வெளியே தனது காதல் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள ரொனால்டோ, மைதானத்திற்கு உள்ளேயும் எண்ணற்ற சாதனைகளைப் படைத்த ஒரு ஜாம்பவான் ஆவார்.

ஸ்போர்ட்டிங் லிஸ்பன், மன்செஸ்டர் யுனைடெட், ரியல் மட்ரிட், யுவென்டஸ் மற்றும் தற்போது சவூதி அரேபியாவின் அல்-நசர் (Al Nassr) கழகங்களுக்காகவும், போர்த்துகல் தேசிய அணிக்காகவும் விளையாடி சர்வதேச மற்றும் கழகப் போட்டிகளில் ஒட்டுமொத்தமாகச் சுமார் 1,000 கோல்களை நெருங்கி சாதனை படைத்துள்ளார்.

உலகில் அதிக கோல்களைப் பெற்றவராகவும் திகழ்கிறார்.

அத்துடன், அண்மையில் நிறைவடைந்த கால்பந்து உலகக் கிண்ணத் தொடரில் விளையாடியதன் மூலம், ஆண்களுக்கான கால்பந்து வரலாற்றில் 6 உலகக் கிண்ணத் தொடர்களில் பங்கேற்ற ஒரே வீரர்கள் என்ற வரலாற்றுச் சாதனையை அர்ஜென்டீனாவின் லியோனல் மெஸ்ஸியுடன் ரொனால்டோ பகிர்ந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல இந்த ஆறு உலகக்கிண்ணத் தொடர்களிலும் கோல் அடித்த ஒரேயொருவராகவும் ரொனால்டோவே இருக்கிறார்.

Recommended For You

About the Author: admin