ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர சீனாவிடம் உதவி கோரும் அமெரிக்கா!
ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில், அமெரிக்கா சீனாவின் இராஜதந்திர உதவியை நாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவுடன், அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட், ஈரான் மீது சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி போரை முடிவுக்குக் கொண்டுவர உதவுமாறு பெய்ஜிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி வெளியான இந்தத் தகவலின்படி, சீனாவும் அமெரிக்காவின் கோரிக்கையை ஈரானிடம் எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், கடந்த இரண்டு வாரங்களாக ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நோக்கில் கத்தார் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தலைமைத் தளபதியுடன் ஏறத்தாழ தினசரி தொடர்பில் இருந்து வருவதாக Axios செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதும், ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதும் இந்த இராஜதந்திர முயற்சிகளின் முக்கிய நோக்கங்களாக உள்ளன.
எனினும், இந்த முயற்சிகள் இதுவரை போர் முடிவுக்கான இறுதி உடன்பாட்டை எட்டவில்லை.

