யாழில் அனுமதியின்றி இயங்கும் சொகுசுப் பேருந்துகளுக்கு எதிராக விரைவில் அதிரடிச் சட்டம்!*

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு, குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு சொகுசுப் பேருந்துச் சேவைகளை இயக்கிவரும் பேருந்துகளுக்கு எதிராக விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

அத்துடன், வடக்கு மாகாணத்தினுள் உரிய பதிவுகள் மற்றும் அனுமதிகளின்றி பணியாளர்களைப் போக்குவரத்து செய்யும் தனியார் பேருந்துச் சேவைகளுக்கு எதிராகவும் இவ்வாறு சட்ட அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் பொலிஸாரும் இணைந்து விரைவில் இந்த விசேட சட்ட அமுலாக்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பி, பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த சுற்றிவளைப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு சேவையில் ஈடுபட்டு வரும் மொத்தம் பத்து பேருந்துகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செல்லுபடியாகும் வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டு வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சட்டவிரோத சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட பயணிகள் போக்குவரத்து முறைமையை பாதிப்பதுடன், சட்டபூர்வமாக சேவையாற்றும் பேருந்து இயக்குநர்களுக்கும் அநீதி விளைவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், வடக்கு மாகாணத்தினுள் அரச திணைக்களங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் ஏனைய பணியிடங்களுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை பதிவு செய்து சட்டபூர்வமாக இயங்குவதற்காக போதுமான கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்ததாகவும், அந்த அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இதுவரை பதிவு செய்யப்படாமல் சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்துகளுக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த விசேட நடவடிக்கையின் போது, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பறக்கும் படை அதிகாரிகளும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து சம்பந்தப்பட்ட பேருந்துகளை பரிசோதித்து, வழித்தட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய சட்டபூர்வ ஆவணங்களை ஆய்வு செய்வதுடன், அனுமதியின்றி சேவையில் ஈடுபடுவது உறுதிப்படுத்தப்படும் பேருந்துகளுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அனுமதியற்ற பேருந்துகள் சேவையை ஆரம்பிப்பதைத் தடுப்பதற்கும், அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்கள் மற்றும் கால அட்டவணைகளுக்கு அமைவாகவே சேவைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், அனுமதியின்றி சேவையில் ஈடுபடும் எந்தவொரு பேருந்திற்கும் இனி சலுகை வழங்கப்படமாட்டாது என்றும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் மேலும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: admin